பிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிகளின் கூட்டம்! நடந்தது என்ன?

பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் நேற்று (13) 5 மணித்தியாலமாக நடந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுற்றது. அங்கு நேற்று என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல்கலைகழக மாணவர்கள் தயாரித்து அரசியல் கட்சிகளிற்கு வரைபை அனுப்பியிருந்தனர். அந்த வரைபை கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டால், கையெழுத்திடலாம் என குறிப்பிட்டு, கையெழுத்திடும் நிகழ்வே நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பித்ததும், பல்கலைகழக மாணவர்கள் தயாரித்து அனுப்பிய ஆவணம் பரிசீலிக்கப்பட்டது. சிறிய சிறிய திருத்தங்கள் செய்தால் கையெழுத்திடுவதில் தமக்கு எந்த சிக்கலுமில்லையென தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி என்பன தெரிவித்தன. கூட்டத்தின் தொடக்கத்தில், மாணவர் தயாரித்த ஆவணத்தில் தேசம், இறைமை என்ற இரண்டு சொற்கள் இருக்கவில்லை, அதை சேர்க்க வேண்டுமென முன்னணி வலியுறுத்தியது. அதற்கு தாம் எதிர்ப்பாளர்கள் இல்லை, தாராளமாக சேர்க்கலாமென ஏனைய கட்சிகள் தெரிவித்தன.

கூட்டத்தின் முதல் மணித்தியாலயத்தில் பெரிய வாய்த்தர்க்கங்கள் இருக்கவில்லை. ஆவணத்தில் கையெழுத்திடும் நிலைமையே இருந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் வேறு காரணங்களிற்காக இடைநடுவில் செல்ல வேண்டியிருந்தது. சுமந்திரன் மண்டபத்தை விட்டு வெளியேறிய பின்னரே, முன்னணி சரமாரியாக அஸ்திரங்களை தொடுக்க தொடங்கியது. சுமந்திரன் வெளியேறுவதற்கு முன்னர், முன்னணியிடம் ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். “சரி, இந்த ஆவணத்தை கோட்டாபய ஏற்றுக்கொண்டு விட்டார் என வைப்போம். அவரை ஆதரிக்கலாமா?“ என. முன்னணி மூச்சு விடவில்லை.

சுமந்திரன் வெளியேறிய பின்னர், மாணவர்களின் ஆவணங்களில் பல திருத்தங்களை கோரினர். இதற்கு முதலில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். “நீங்கள் என்ன பொழுதுபோக்கிற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா?. அனைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறு திருத்தங்கள் செய்வது வேறு விடயம். எல்லா விடயங்களையும் திரும்ப மாற்றுவதென்றால், இதற்கு முன்னர் எதற்கு கூட்டம் நடந்தது?“ என காட்டமாக, முன்னணியை கேட்டார்.

முன்னணியின் தொடர் குழப்பங்களால் அதிருப்தியடைந்த தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் கலந்து கொண்ட க.அருந்தவபாலனும், இதேவிதமாக கடிந்து, இரண்டு, மூன்று முறை கூட்டத்திலிருந்து வெளியேற முயன்றார். எனினும், ஏனையவர்கள் அவரை சமரசப்படுத்தி உட்கார வைத்தனர்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென முன்னணி அடுத்த அஸ்திரத்தை ஏவியது. எனினும், ஏனைய கட்சிகள் அதை எதிர்த்தனர். முதலில் எமது தரப்பு நிபந்தனைகளை வைப்போம். இப்பொழுதே பகிஷ்கரிப்பு என்ற அஸ்திரத்தை எடுத்தால், பகிஸ்கரிப்பின் பின்னர் என்ன செய்யப் போகிறோம்? எடுத்தோம் கவிழ்த்தோம் என இதை கையாள முடியாது. முதலில், நிபந்தனைகளை முன்வைப்போம் என ஆலோசனை தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரத்தை முன்னணி கைவிட்டு, அடுத்த விவகாரமாக, இடைக்கால அறிக்கை விவகாரத்தை கையிலெடுத்தது.

இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக, ஆவணத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென குறிப்பிட்டது. தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ கூட்டாக அதை எதிர்த்தன. அப்படியென்றால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என தொடங்கி இன்று வரையான எல்லாவற்றையும் குறிப்பிடுவோமா?, இப்படியொரு ஆவணத்தை குறிப்பிட்டால் அது நகைச்சுவை ஆவணமாகி விடாதா என மற்றவர்கள் கேள்வியெழுப்பினர். இது நீண்ட வாதப்பிரதிவாதத்தை ஏற்படுத்தியது.

முன்னணிக்கு சீரியஸாக மாவை சேனாதிராசா பதிலளித்துக் கொண்டிருக்க, ஒருவர் “அண்ணை அவங்கள் பகிடியாக குழப்பிக் கொண்டிருக்கிறாங்கள். இது விளங்காமல் நீங்கள் சீரியஸாக கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்“ என சொல்ல, மாவையின் முகம் இருண்ட சுவாரஸ்யமும் நடந்தது.

இந்த விவாதத்தின் இடையே, தமிழரசுக்கட்சி உருவாகிய போது, வெளியிட்ட கொள்கை பிரகடனத்தை தாம் ஏற்றுக்கொள்கிறோம், அதனடிப்படையில் வரைபை தயாரிக்கலாம் என முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே கஜதீபன், “தமிழ் அரசு கட்சி ஏன் உருவாகியது என்பதையும் குறிப்பிடலாம்“ என்றார் நகைச்சுவையாக. (இந்திய, வம்சாவளியினரின் குடியுரிமை பறிப்பிற்கு ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கை உயர்த்தியபோது, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அதை எதிர்த்தார். அந்த முரண்பாடு ஆழமாகி, தமிழ் அரசு கட்சியை உருவாக்கினார்)

கூட்டத்தின் இடைக்கட்டத்தில், தனது எதிர்ப்பை பதிவு செய்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அதன் பின்னர் பேசவேயில்லை. கடும் அதிருப்தியுடன் மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக வசனம் இணைத்தால் மாத்திரமே இன்று கையொப்பமிடுவதாக முன்னணி தெரிவித்தது. அந்த வசனம் இணைக்கப்பட்டால் கையெழுத்தி மாட்டோம் என தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ என்பன அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டன.

No comments