ஒருமித்த இலங்கையின் கீழ் செயறபட வேண்டும்!

ஒருமித்த இலங்கையின் கீழ் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க கூடிய வகையிலேயே நாம் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் மக்கள் மேடை நிகழ்வு இன்று (05) மாலை சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற போது அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

எனது ஆட்சி உருவானால் சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்படும். மனித உரிமைகள், அரசியல் சார்பின்மை என்பன பாதுகாக்கப்படும். எவ்விதமான தலையீடுகளும் அரச துறையில் இருக்காது. எனவே நிறுவனங்களினுடைய சுயாதீனத்தை பாதுகாக்கக் கூடிய வகையிலேயே நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டை ஆளுகின்ற போது அரசு நிர்வாகமாக இருக்கலாம், அபிவிருத்தி தொடர்பான நிர்வாகமாக இருக்கலாம் தனி நபர் குழுக்கள் என்ற வகையில் நாம் செயற்படுகின்ற போதும் இன, மத, மொழிப் பேதங்களை நாம் விட்டொழிக்க வேண்டும். அரசியல் நன்மைகளை மாத்திரம் கருதி இப்படியான பேதங்ளை உருவாக்குவதை நாங்கள் அங்கீகரிக்க முடியாது.

எனவே இந்த விஷயத்தில் ஒரு தேசம் என்ற வகையில் எங்களுக்கு நேசம், பாசம் இருக்க வேண்டும். ஒருமித்த இலங்கையின் கீழ் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க கூடிய வகையிலேயே நாம் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து செயற்பட வேண்டும். மக்களுடைய நன்மையை அவர்கள் நேசிக்க வேண்டும். எனவே சாதாரண கொள்கையுடன் சிறந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப முடியும்.

எதிர்கால மனிதன் நீதியை மதிக்கின்ற பண்பாளனாக திகழ வேண்டும். இந்த விஷயத்தைப் பொருத்தவரையில் பாலர் பாடசாலையில் இருந்து எங்களுடைய கல்வியை நாம் திறம்பட சீரமைக்க வேண்டியிருக்கின்றது. உண்மையிலேயே மனிதன் அடிமைத்தனம் இல்லாத சுதந்திரமான மனிதனாக வாழ வேண்டுமாயின் இந்த நல்ல அம்சங்களை நாம் மேம்படுத்த வேண்டும்.

அதேபோல் கல்வியை ஒரு மூலதனமாக நாங்கள் ஏற்றுக்கொண்டு செய்யப்பட வேண்டும். ஏனெனில் எங்களுடைய அரச பாடசாலைகளில் மக்களின் வரிகளின் மூலமாகத்தான் கல்வி போதிக்கப்படுகிறது. நாம் நவீன உலகை உருவாக்குவதாயின் கம்யூட்டர், தொழில்நுட்பமாக இருக்கலாம் அல்லது ஒரு ஆங்கில மொழியாக இருக்கலாம். அவற்றை போதிக்க வேண்டும். செம்மையாக கற்க வேண்டும். - என்றார்.

No comments