யாழில் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

கொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விளக்கங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (22) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். காரைநகர் – பாலாவோடை பகுதியில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதியன்று, 55 வயதான குடும்பத்தலைவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் 9 பேர் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்ப விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். வழக்கிற்கான விளக்கங்கள் நிறைவடைந்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுடன், 9 எதிரிகளில் 7 பேர் விடுக்கப்பட்டனர்.

ஏனைய இருவருக்கு கொலை குற்றத்திற்காக மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தக் கொலை வழக்கில் மரணதண்டனை பெற்றவர்களில், கொலை செய்யப்பட்டவரின் தம்பியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments