அலுவலர்களது வீடுகள் முற்றுகைக்குள்?


காணாமல் பேர்னோர் அலுவலகம் மூடப்படும் வரை தமது போராட்டங்கள் தொடருமென காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறவுகள் அறிவித்துள்ளன.

அதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்தில் கொழுத்த சம்பளத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அப்பணிகளிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தும் வரையில் அவர்களது வீடுகளை முற்றுகையிடும் போராட்டமொன்றையும் ஆரம்பிக்க இருப்பதாகவும்  குடும்பங்கள் அறிவித்துள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வெச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது குடும்பத்தவர்கள் திரும்ப ஒப்படைக்கப்படவேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.எமக்கு எந்தவொரு இழப்பீடும் தேவையில்லை.

எமது குடும்பத்திற்கு ஆறாயிரம் பிச்சைக்காசை தரப்போவதாக சொல்லும் அரசு மறுபுறம் எம்மால் நிராகரிக்கப்பட்ட அலுவலகத்திற்கு அள்ளிக்கொடுக்கின்றது.

அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களிற்கு இலட்சங்களில் அள்ளி வீசுகின்றனர்.

ஏம்மவர்களாக இருந்து கொண்டு இவ்வாறு செயற்படுபவர்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு எமக்கு இழைத்துவரும் துரோகத்தினை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்தனர்.

முன்னதாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள காணாமல் போனோர் அலுவலகம் முன்பதாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்ட அவர்கள் அவ்வலுவலக பெயர்பலகை மீது சாணியால் வீசினர்.

No comments