இராணுவ தளபதிகளின் கருத்துக்களை பயன்படுத்தி பிரச்சாரம்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்தை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவருக்கு எதிராக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம் முறைப்பாடு வழங்கியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக 2009 ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி இராணுவத் தளபதி தெரிவித்த கருத்தடங்கிய முழுப்பக்க விளம்பரம் மூன்று பத்திரிகைகளில் வெளியானமை, தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை குறித்த மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபஷவுக்கு ஆதரவாக, இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்துடனான விளம்பரங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐ.தே.க. முறைப்பாடு செய்யவுள்ளது.

பத்திரிகைகளில் நேற்று வெளியிடப்பட்ட முழுப்பக்க விளம்பரங்களில், கோட்டாபய ராஜபஷவுக்கு ஆதரவாளர் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுடன் அவருக்கு ஆதரவாக ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள கருத்தும் இடம்பெற்றுள்ளது. அந்த விளம்பத்தில், தற்போதைய இராணுவத் தளபதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சார்பாக வெளியிட்ட கருத்துக்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அதில் முன்னாள் படைத் தளபதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்தை, பொதுஜன பெரமுன தமது தற்போதைய அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பது, நெறிமுறையற்றது என்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரைக்குப் பொறுப்பான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments