ஜனாதிபதி தேர்தலிலிருந்து வெளியேற தயார்:சிவாஜி


ஜனாதிபதி தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தரப்புக்களை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ள தமிழர்களின் கோரிக்கையை தென்னிலங்கiயில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர் தாம் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் என ஏற்றுக் கொள்ளகூடிய வகையில் உறுதிமொழி தருவார்களாயின் தான் ஜனாதிபதித்  தேர்தல் போட்டியிலிருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்திலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போதும் நான் பணம் வாங்கிவிட்டு ஒரு தரப்பாரை வெற்றிபெற வைப்பதற்காக செயற்பட்டேன் எனப் பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த வருடமும் நான் தேர்தலில் இறங்கியதும் ராஜபக்ச தரப்பிடம் பணம் வாங்கி போட்டியிடுவதாக குற்றம் சுமத்துகின்றனர். தமிழினத்தின் விடுவிற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை உலகிற்கு எடுத்துக் கூறவுமே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அவர் போட்டியிடும் போது அவர் சிங்கள அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை. அவர் கோடீஸ்வரன் என்பதாலா இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

அத்துடன் எங்கள் மீது விசமப் பிரச்சாரத்தை தென்னிலங்கைத் தரப்பும் இங்குள்ள சிலரும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக நான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக அறிகின்றேன். அவருக்கு நான் கூறிக் கொள்வது என்னவெனில் என்மீது விமர்சனங்களை முன் வைப்பதற்கு முன்னர் உங்கள் கொள்கைகளை பரிசீலனை செய்து பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போரை முன்னின்று வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரரித்திருந்தனர். அந்த நேரத்தில் கஜேந்திரகுமாரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு முக்கிய காரணிகளில் ஒருவராக இருக்கும் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தமிழ்த்தேசம் தருவார் என்றா கஜேந்திரகுமார் அவரை ஆதரித்தார்.

இதற்கும் அப்பால் இன்னும் வெட்கக்கேடான விடயம் என்னவெனில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் நல்லூர் மந்திரி மனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் மேடையேறி பிரச்சாரம் செய்தார். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்காக உயிர் உள்ளவரை போராடி வரும் என்னை இவர்களுக்கு விமர்சிக்க அருகதை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாக இருந்தது. அதிலும் குறிப்பாக சிவில் அமைப்புக்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்கள் பேரவை போன்ற தரப்புக்கள் தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர் ஒருவர் களம் இறக்கப்படவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இப்போது நாம் தேர்தலில் இறங்கியவுடன் வாக்குகளை உடைப்பதற்காக இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால் பொது வேட்பாளரை களம் இறக்கவேண்டும் என திரிந்தவர்களும் வாக்குகளை உடைக்கவா நினைத்தார்கள்.

தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் ஒருமித்த கோரிக்கையை வரைபு செய்து தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான தரப்புக்களிடம் கோரிக்கையாக முன்வைப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரையாவது தாம் ஆட்சிக்கு வந்தால் அதை நிறை வேற்றுவோம் என ஏற்றுக்கொள்ளகூடிய வகையில் உறுதிமொழியைத் தருவார்களாயின் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உடனடியாகவே விலகுவேன் அதனை நான் பகிரங்கமாகவே அறிவிப்பேன்.

என்னைப் பொறுத்தவரையில் தென்னிலங்கைக் கட்சிகள் எவையும் அவ்வாறான உறுதி மொழியை தருவார்கள் என நான் நம்பவில்லை. ஏனெனில் அவர்கள் தமிழர்களை கிள்ளுக்கீரையாகவே நினைக்கின்றனர். காலங்க காலமாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றேன். நான் பணம் பெற்றுத்தான் போட்டியிடுகின்றேன் எனக் 
குற்றம் சாட்டுபவர்கள் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கேட்கின்றேன்.
அவ்வாறு நான் பணம் பெற்றுத்தான் போட்டியிடுகின்றேன் என்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து உடனடியாகவே விலகுவேன். மேலும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுமையுடன் உள்ளது எனினும் இவர்களின் திட்டம் தேர்தலுக்கு ஒருவாரமோ இருவரத்திற்கு முன்னர் மகிந்த தரப்பை ஆட்சி பீடம் ஏறக்கூடாது எனக்கூறி சஜி பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்படக்கூடும் பெரும்பாலும் கூட்டமைப்பின் திட்டம் இதுவாகவே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

No comments