இதற்கு பெயர் முதலைக்கண்ணீர் இல்லமால் வேறு என்ன? -விஷ்வா விஸ்வநாத்

ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலையும், ஈழத்தமிழ் ஆதவாளர்களின் அருவெறுக்கத்தக்க முதலைக்கண்ணீரும் !

தமிழ்நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று இங்கே உள்ள அரசியல்வாதிகளின் அரசியல்"பலன்"களுக்கேற்ப  'நிறம்' மாறும் தன்மை.

ராஜிவ் கொலைவழக்கில் தொடர்புடையவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவர்களில் வழக்கில் தொடர்பற்றவர்கள் எனப் பலர் விடுதலை செய்யப்பட்டு இறுதியாக 41 பேர் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் விசாரணைக் காலத்திலேயே 12 பேர் இறந்து போகிறார்கள்.

மீதமுள்ள பிரபாகரன், பொட்டு அம்மான், கே.பத்மநாபன் எனும் கே.பி ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகள் என்று கூறி மீதம் சிறையில் உள்ள  26 பேருக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்படுகிறது.

விசாரணை தொடங்கி சுமார் ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களில் கொலையில் தொடர்பில்லை எனக்கூறி 19 பேர் விடுவிக்கப்படுகிறார்கள்.

மீதமுள்ள  ஏழு பேர்தான் "எழுவர்" எனப்படும் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் இரா.பொ.இரவிச்சந்திரன்.

தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியபின், ஆயுள் தண்டனைக்காலம் முடிந்தும் இன்னமும் சிறையில் வைக்கப்பட்டுள்ள எழுவரும் இவர்களே.

அதாவது...குற்றம் சாட்டப்பட்டு, சிறைத்தண்டனை முடிவடைந்து அதற்கு மேலும், விடுவிக்கப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்கள் இவர்கள்.

இவர்களில், நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன் மற்றும் சாந்தன் ஆண்கள் சிறையிலும், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை புழல் சிறையிலும், இரா.பொ.இரவிச்சந்திரன் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

தண்டனைக்காலம் முடிந்தும் தண்டனை அனுபவித்த இவர்களை விடுவிக்கலாம் என விசாரணை அதிகாரி கார்த்திகேயன் உள்பட பலரும் தெரிவித்துவிட்ட நிலையிலும் இவர்களை விடுவிக்கவே கூடாது என்று கூறிவருபவர்களில் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல வேறு சிலரும் உள்ளனர்.

ராஜிவ் காந்தியைக் கொன்றதுடன், உடன் கொல்லப்பட்ட 14 பேரின் கொலைக்கும் காரணம் இவர்கள்தான் என்பதே காங்கிரஸ்காரர்களின் குற்றச்சாட்டு.

ஆனால், இந்த வழக்கின் "சதி" என்ன என்பதை சிபிஐ விசாரிக்காமல், அது எனது Jurisdiction அதாவது விசாரணை எல்லைக்குள் வரவில்லை என்று கூறி இந்த எழுவருக்கும் தண்டனை வாங்கிக்கொடுத்த கையோடு ஒதுங்கி விடுகிறது.

அதன்பின்னர்...ராஜிவ் கொலை வழக்கின் "சதி"  யார் செய்தது? கொலைக்கு சூத்திரதாரி யார் ? (!) என விசாரிக்கவே பல்நோக்கு விசாரணைக்  குழு ஒன்றை அமைத்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது. சிபிஐ அலுவலர்களைக்கொண்டு அமைக்கப்பட்ட அந்த விசாரணைக்குழு இன்னமும் சதி வலைகளைத் தேடிக்கொண்டிருக்கிறது(!).

அதாவது....கொலைக்கான சதி, கொலை செய்யப்பட்ட வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது என்பதை எல்லாம் கண்டுபிடிக்காமல் கொலை செய்தவர்கள் இவர்கள்தான் என்று 41 பேரை Filter செய்து அதில் 26 பேருக்கு தூக்கு தண்டனையும் கொடுக்கப்பட்ட ஒரு வழக்கு இது மட்டுமே.

கதை....இப்படி இருக்க,

எழுவர் விடுதலையில் "இவர்கள்" அழுத்தம் கொடுத்திருந்தால் அவர்கள் எபோதே விடுவிக்கப்பட்டிருப்பார்கள் என்னும் நிலையில் MP , MLA , அமைச்சர் பொறுப்புகளில் இருந்த, இருக்கும் தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு கட்சியினர் எவரும் கடுமையான அழுத்தங்களை கொடுத்திருக்கவே இல்லை.

காங்கிரஸ் ஆகட்டும் பாஜகவாகட்டும் அந்தக்  கூட்டணி கட்சியின் மனம் "நோகாதபடி" பார்த்துக்கொள்வதில் இந்த கட்சியினர் மிகுந்த கவனமாகயிருந்தனர், கவனமாக இருக்கின்றனர்.  

மேலும்....தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநில அரசியல் கட்சிகள் மக்களிடம் கூட எழுவருக்கு ஆதரவான நிலைப்பாட்டு ஆதரவைத் திரட்ட முடியவில்லை.

இதைவிட ஒரு நுண்ணரசியல் இந்தக்கட்சிகளால் செய்யப்படுகிறது. அது "பேரறிவாளனை" மட்டும் முன்னிறுத்துவது. பேரறிவாளன் பேட்டரி வாங்கித்தான் கொடுத்தார் என்று கூறப்படுகிறது அது பொய், விசாரணை அதிகாரிகூட அது தவறு என்று சொல்லியதை முன்னிறுத்தி "பேரறிவாளன் உள்பட எழுவரை விடுதலை செய்யுங்கள், பேரறிவாளன் குற்றமற்றவர்" என்று ஊடகங்கள், மேடைப்பேச்சுகள், அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றின்போது தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

அதாவது...பேரறிவாளன் குற்றமற்றவர் அவரைப்போலவே ஏழுபேரையும் விடுதலை செய்யுங்கள் என்பதே இவர்கள் பாடும் ஒரே ராகம்.

மத்திய அமைச்சரைப்பார்க்கச் செல்லும்போதுகூட பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாளை மட்டுமே அழைத்துச்செல்கிறார்களே தவிர எழுவரின் பெற்றோரை, உறவினரை அழைத்துசெல்வதில்லை.

எழுவரின் உறவுகளை முன்னிலைப்படுத்தி எழுவர் விடுதலைக்கு இந்த ஈழ ஆதரவு கட்சியினர் எவரும் குரல் கொடுப்பதில்லை.

சரி...அவ்வளவு ஏன் பேரறிவாளன் குற்றமற்றவர் என்று சான்றிதழ் கொடுக்கும் ஐயா. கி.வீரமணி அவர்கள் பேரறிவாளன் உள்பட எழுவரை எத்தனை முறை  சிறைக்கு சென்று பார்த்து நலன் விசாரித்து, ஆறுதல் கூறியுள்ளார்?

இங்கே..எழுவர் விடுதலை இனி வாய்ப்பே இல்லை என்று கூப்பாடு போடும் திராவிடக்கட்சியினர் உள்பட ஈழ ஆதரவு கட்சியினர் எத்தனை பேர் எழுவரை சிறைகளில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

அதிலும்...

இந்த சாந்தன் முகம், ராபர்ட் பயஸ் முகம் இந்த ஈழ ஆதரவுக் கட்சிகளின் எத்தனை பேருக்கு தெரியும்?  திக, திமுக, மதிமுக, பாமக,  விசிக....என நீளும் ஈழ ஆதரவுப்பட்டியலில் எத்தனை பேர் இவர்களை எல்லாம் சிறையில் சென்று சந்தித்து இருப்பார்கள்?

இதையெல்லாம் விட பரிதாபம் இரா.பொ.இரவிச்சந்திரன் நிலைமைதான்.  எழுவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வைத்ததே நாங்கள்தான் என்று மார்தட்டும் அரசியல் தலைவர்கள் கூட இரவிச்சந்திரனை சென்று சிறையில் பார்த்ததில்லை.

ஆனால், இவர்கள் எல்லோரும் படும் ஒரே ராகம் "பேரறிவாளன் உள்பட எழுவரை விடுதலை செய்யவேண்டும்" என்பதே.

அற்புதம்மாள் இல்லையெனில் இந்த ராகமும் இவர்கள் பாடி இருக்கமாட்டார்கள். ஏதோ..அந்தம்மா படும் பாட்டால்தான் பேரறிவாளன் பெயரைக்கூட இவர்கள் உச்சரிக்கிறார்கள்.

ஆளும்கட்சியில் கூட்டணி பெற்றுள்ள  பாமக  தலைவர் கூடமனு கொடுத்ததோடு "அழுத்தத்தை"  மெதுவாக்கிக்கொண்டார்.

ஆக....இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வலுவான அழுத்தங்களை கொடுத்திருந்தால், கொடுத்தால்...இவர்கள் அங்கம் வகித்த, வகிக்கும் ஆளும் கூட்டணி கட்சிகள் செவி சாய்ந்திருக்கும்.

பிரதமர் என் நண்பர் என்று கூறிக்கொள்ளும் வைகோ அவர்களால் கூட எழுவர் விடுதலை பற்றி பிரதமரிடம் உறுதியான அழுத்தம் அளித்து விடுதலை தேடித்தர முடியவில்லை.

இவர்கள் எல்லோரும், கோரிக்கை மனு, மென்மையான அழுத்தங்களோடு நின்று கொண்ட நிலையில்தான், எழுவர் விடுதலை எனும் பந்து ஆளுநரின் கைகளில் வீசப்பட்டுள்ளது.

அவர் கைகளில்தான் பந்து உள்ளது, நாங்கள் என்ன செய்ய என்று அதிமுக, பாஜக அரசுகள் ஒதுங்கிக்கொண்டுவிட்டன. கூட்டணி கட்சிகள் கோரிக்கை, மனு  என மென்மையான அழுத்தங்களோடு நின்றுவிட்டன.

ஆனால்....எழுவர் விடுதலைக்கான வாய்ப்பு பற்றி மாமல்லபுரம் வந்து தமிழர் உடையான வேட்டி அணிந்த பிரதமர்கூட வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுவரை விடுவிக்க மனு கொடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர்  கே.எஸ். அழகிரி....ராஜீவைக் கொன்றது தமிழர்கள்தான் என்றும் அவர்களை விடுவிக்க கூடாது என்றும் திருவாய் மலர்கிறார்.

(ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தமிழர்கள், விடுதலைப்புலிகள் என்று மணிக்கொருதரம் கூறும்  கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் காரர்கள், "ராஜிவ் கொலை வழக்கில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பில்லை, அவர்கள் அதைச் செய்யவில்லை" என்று கூறும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்களின் நிலைப்பாடு பற்றி என்ன கூறுகிறார்கள் என்று தெரிவித்தால் உலகம் தெரிந்துகொள்ளும்.)

சரி...எழுவர் விடுதலைக்காக துடிக்கும் இந்த ஈழ ஆதரவுக்கு கட்சியினருக்கு...தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட 26 பேரில் குற்றமற்றவர்கள் என ஏழு ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார்களே 19 பேர் அவர்களின் இன்றைய நிலை என்ன என்று தெரியுமா?

ராஜிவ் கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர்கள் என்ற பழிச்சொல்லோடு தங்கள் வாழ்நாள் முழுதும் வெளியே திறந்த வெளிச்ச சிறை வாழ்க்கை நடத்தி வரும் அவர்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு, வாழ்வியல் உதவிகளை இந்தக்கட்சியினர் செய்துவிட்டார்கள்?

அவர்கள் எங்கே, எங்கே இருக்கின்றார்கள் என்றாவது இவர்களில் யாருக்காவது தெரியுமா? அக்கறை இருக்கிறதா?

பின்னர்....இந்த எழுவர் மீது மட்டும் எதற்கு அக்கறை?!

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களின் நிலை பற்றியும் இந்த ஈழ ஆதரவுக்கட்சியினர் கவலை கொள்வதில்லை, எழுவரில் அதுவும் பேரறிவாளன் தவிர வேறு எவர் மீதும் இவர்கள் கவலை கொள்வதில்லை.

இதற்கு பெயர் முதலைக்கண்ணீர் இல்லமால் வேறு என்ன?

-விஷ்வா விஸ்வநாத்

No comments