வேட்டி கட்டி மறைத்த பூகோள அரசியல்-விஷ்வா விஸ்வநாத்

சீன  அதிபரின் வருகையை அடுத்து ஊடகங்கள்....மோதி வேட்டி கட்டினார், ஜீ சின்பிங் ரசம் சோறு சாப்பிட்டார், வந்தவர்களுக்கு வரவேற்பு என   சுழன்று சுழன்று இரண்டு நாட்களாக மோதி புராணம் பாடி வருகின்றன.

டிவியை ஆன் செய்தாலே...காது சவ்வு கிழியும் அளவுக்கு இந்த செய்திகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆனால், எத்தனை பத்திரிகை, ஊடகங்கள் இவர்களின் சந்திப்பின் பின்னணி, பூகோள அரசியல், சந்திப்பின் எதிர்கால நன்மைகள் பற்றி ஆய்ந்தன என்று தெரியவில்லை. ஆராயும் என எதிர்பார்ப்போம்.

நமது பங்கிற்கு தொடங்கி வைப்போம்.

"சீனா, இந்தியாவைச்சுற்றி "முத்துமாலை" எனும் செயல்பாட்டை பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது. இந்தத் திட்டத்தின்படி இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளைத் தன் நட்பு வட்டத்திற்கு கொண்டுவந்ததுடன் குறிப்பாக இலங்கையில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பனாக மாறி அங்கே முதலீட்டைக் குவித்து இலங்கையை சீனாவின் தளமாகவே மாற்றியது.

இலங்கையின் அடிப்படைக் கட்டமைப்பு, எரிபொருள் சுத்திகரிப்பு, விமான ஓடுதளம் என்னும் பல பில்லியன் டாலர் முதலீட்டை இலங்கையில் குவித்தது சீனா.

ஏற்கனவே பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைத் தன்வசம் வைத்துள்ள சீனாவுக்கு இலங்கையில் ராஜபக்சவும் சிவப்புக் கம்பளம் விரிக்க....இந்தியாவைச் சுற்றிலும் வட்டவடிவமாக "முத்துமாலை" போல நாடுகளைத் தனது நட்பு நாடாக்கிக் கொண்டது சீனா.

இலங்கையில் சீனா இவ்வாறு நட்பு பாராட்டியதைக்கண்டு அமெரிக்காவின் "கழுகுக்கு" மூக்கு வியர்க்கத்தொடங்கியது.

அதன் விளைவுதான் சீனாவின் மூக்குடைக்க அதன் நண்பரான ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டது.

அதற்கு அமெரிக்கா கையில் எடுத்த ஆயுதம்தான் ஈழத்தமிழர் மீதான திடீர் அக்கறையும், அன்பும்.

2012 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை தீர்மானத்தைக் கொண்டுவந்தது அமெரிக்கா.

இலங்கை இறுதிப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்ற போது ஈழத்தமிழர்களுக்கு அது பெரும் திருப்பு முனையாக இருந்தாலும், அது ஈழத்தமிழர்களின் மீதான அமெரிக்காவின் முழுமையான அக்கறை அல்ல, சீனாவுக்கு எதிராக நகர்த்தப்பட்ட காய் என்பது பூகோள அரசியல் பற்றி நன்கு அறிந்த பலருக்கும்  தெரியவந்தது.

ஐநா வில் தீர்மானம் நிறைவேற்றிய கையோடு, தமிழர்களைக் காய்களாகக் கொண்டு அடுத்து வந்து இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை தமிழர்களைக் கொண்டே தோற்கடித்தது அமெரிக்கா.

ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி சீனாவின் மூக்கை உடைத்த கையோடு, தனது விசுவாச இலங்கை அரசியல் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை அரியணைக்கு கொண்டுவந்தது அமெரிக்கா.

அதேவேளை...2009 இறுதிப்போரின்போது "முள்ளிவாய்க்கால்" தாக்குதல் முடிவு நாளன்று ராஜபக்ச இலங்கையில் இல்லை. அந்த இறுதி படுகொலையை நிகழ்த்த ராணுவத்திற்கு இடப்பட்ட கட்டளையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தவர் தற்போதய அதிபர் மைத்திரி பால சிறிசேன.

ராஜபக்ச வீட்டிற்கு போனாலும் சிறிசேன அதிபர் அரியணையில் இருந்து இறங்கவில்லை என்பதையும் நினைவு கூற வேண்டும்.

ஆக, அப்படிப்பட்ட சீனாவின் அதிபரைத்தான் பிரதமர் மோதி அழைத்து, அன்பு பாராட்டியுள்ளார்.

போன மாதம் அமெரிக்கா சென்று அமெரிக்கா வாழ் இந்தியர்களின்  நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்பை அழைத்து நட்பு பாராட்டிய மோதி இந்த மாதம் சீன அதிபருக்கு விருந்து கொடுத்துள்ளார்.

இந்தியாவின் பிரதமரோடு, இங்கே கைகுலுக்கும் ஜின்பிங்கின் மற்றொரு  கை பாகிஸ்தானின் தோளில் கிடப்பதைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது.

இந்தியாவின் இத்தகைய நகர்வுகள் ஆசிய அரசியலில், இந்தியப் பெருங்கடல் பூகோள அரசியலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன? உலக அளவில் என்ன மாற்றங்களை நிகழ்த்தப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எல்லோருக்குக்கும் நட்பு நாடாக இந்தியா இருந்து கொண்டு அனைவருக்கும் பொதுவானதாக நடந்துகொண்டாலும், பிரதமர் மோதி முன்னிலையில் இன்முகம் காட்டும் அமெரிக்காவின், சீனாவின் சுய ரூபங்கள் அவ்வளவு நேர்மையானதோ, இனிமையானதோ அல்ல."

No comments