வெள்ளை வேன் கடத்தலின் திடிக்கிடும் உண்மைகள் அம்பலம்!


கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன் தொடர்பில் பல்வேறு தகவல்களை விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

54-9238 எனும் இலக்கத்தை கொண்ட குறித்த வெள்ளை வேன்,  கடற்படையின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளரின் கீழ்  வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  இந் நிலையில்  கடத்தல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் கடற்படை நடவடிக்கை பிரிவு பணிப்பாளராக இருந்த அதிகாரியை விசாரித்து வாக்கு மூலம் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சி.ஐ.டி.  கோட்டை நீதிவான்  ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது.

இந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கல் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மேலதிக விசாரணை அறிக்கையுடன் இந்த விடயங்களை  நீதிவானுக்கு அறிவித்தார்.

 அத்துடன் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ உள்ளமை தொடர்பில், அவரை விசாரணை செய்ய தேவையான நீதிமன்ற உத்தரவை அவரிடம் கையளித்துள்ளதாகவும்  இன்று (12) அவரை விசாரிக்க நடவடிக்கை  எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டிருந்தன.  குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் - அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.  இவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில்,  அது குரித்து சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரித்து வருகின்ரது. அது குறித்த நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றது.

இதன்போது இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 15 பேரில் ஒருவர் சிறை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்ப்ட்ட நிலையில் ஏனையோரின் ஒருவரைத் தவிர ஏனையோர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மன்றில் ஆஜராகியிருந்தனர். முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொடவின்பாதுகாப்பு உத்தியோகத்தரும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தவருமான லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க,  கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார,  நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிறி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ்,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனாரத்ன, அண்ணாச்சி எனப்படும் இம்புலாவல உப்புல் சமிந்த, கடற்படை புலனாய்வாளர் ஹெட்டி ஹெந்தி, நீர் கொழும்பு படகு உரிமையாளர் என்டன் பெர்ணான்டோ, கடற்படை வீரர் சம்பத் ஜனக குமார  ஆகியோரே ஆஜராகியிருந்ததுடன் இரண்டாம் சந்தேக நபரான கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்ட ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க ஆஜராகவில்லை. அவர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாக மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது.

விளக்கமறியலில் உள்ள நேவி சம்பத் எனப்படும் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி முதியன்சலாகே சந்தன் பிரசாத் ஹெட்டி ஆராச்சி  சிறை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

 வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது, மேலதிக விசாரணை அறிக்கையை சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா சமர்ப்பித்தார்.

அத்துடன், கனம் நீதிவான் அவர்களே,  நீதிமன்றின் ஆலோசனைக்கு அமைய பெற்றுக்கொள்ளப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோவை விசாரிப்பதர்கான உத்தரவு அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) அவரை விசாரித்து வாக்கு மூலம் பெறவுள்ளோம்.

அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள வெள்ளை வேன் தொடர்பிலான விசாரணைகளில் அந்த வேன் கடற்படை  நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாயகத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவரிடம் விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.' என குறிப்பிட்டார்.

இதனைவிட நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்டுள்ள மேலதிக அறிக்கைகளின் பிரகாரம்,

'54 -9238 எனும் குறித்த வெள்ளை வேன்,  கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், அது வலஸ்முல்லை பகுதியில் உள்ள  வாகன வாடகை நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டிருந்துள்ளமையும், அந் நிறுவனத்திடம்  இருந்து  கடற்படையினர் அதனை வாடகைக்கு பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அவ்வாறு  வாடகைக்கு பெறப்பட்ட வேன் அப்போதைய கடற்படை நடவடிக்கை பணிப்பாளர் நாயகமாக இருந்த கொலம்பகேவின் கீழ் இருந்துள்ளதுடன்,  அதனை பிரதி நடவடிக்கை பணிப்பாளராக இருந்த டி.கே.பி. தஸநாயக்கவின் ஆலோசனைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் அமைய நேவி சம்பத் பயன்படுத்தியுள்ளமைக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும்  அறிக்கைகள் ஊடாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளில்,  விளக்கமறியலில் உள்ள  நேவி சமப்த் எனும் ஹெட்டி ஆராச்சியை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான்,  ஏனையோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மன்றில் ஆஜராக உத்தரவிட்டார்.

No comments