தமிழர் தாயகமெங்கும் திலீபனின் நினைவேந்தல்!


தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32 ஆவது நினைவுதினம் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் இன்று வியாழக்கிழமை உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவு தூபிகள் அமைந்திருந்த நல்லூர்,பருத்தித்துறை மற்றும் புதுக்குடியிருப்பு முதல் கிழக்கிலும் மாவட்டங்கள் தோறும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உயிர்நீத்த 10.48 அளவில் ஈகைச்சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரும் ஏற்றப்பட்டு தொடர்ந்து மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

நல்லூரில் கட்சிகளை தாண்டி அனைத்து தரப்புக்களும் இணைந்து நினைவேந்தலில் பங்கெடுத்திருந்தனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நடைபயணியும் திலீபன் நினைவுதூபியடியில் முடிவுக்கு வந்திருந்தது.மாவீரரொருவரது தாயார் பொதுச்சுடரை  அங்கு ஏற்றிவந்திருந்தார்.

பருத்தித்துறையில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்; ஈகைச்சுடரேற்றியதைத் தொடர்ந்து மூன்று மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்த தாயாரொருவர் தியாக தீபம் திலீபன் நினைவு பொதுச்சுடரினை ஏற்றியிருந்தார். 

புதுக்குடியிருப்பில் பொதுமக்களது ஏற்பாட்டினில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ்.பல்கலைக்கழகத்திலும் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments