நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்; மகாநாயக்கர் எச்சரிக்கை!


கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையான மக்களைக் குழப்பிவிட்டு அவர்கள் மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை குருதி சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள் என்று பௌத்த மக்களின் பெரும் தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிச் சம்பவம் தொடர்பில் நேற்று மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் கருத்தொன்றை வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புத்தசாசனத்தில் பிக்குமார்கள் என்பவர்கள் மிகவும் கருணையாகவும், அன்பாகவும் பொறுமையாகவும் செயற்படுகின்ற பிரிவினர்களாவர். கருணையின் சாசனம் என்றே இதனை புத்தசாசனம் கூறுகிறது.

இப்படிப்பட்டவர்கள் தடிகளாலும், பொல்லுகளாலும், கத்திகளாலும் தாக்கக்கூடியவர்கள் அல்லர். இவர்கள் மிகவும் சமாதானமாக சட்டத்தை மதித்து செயற்படுபவர்கள். இவர்களில் எவராவது ஒருவர் இறந்தால், அவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

ஸ்ரீலங்கா, வடக்கு என்று புறம்பான நாடு இங்கு இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. அப்படியிருந்தால் தான் சட்டரீதியான சிறந்த ஆட்சியை செய்ய முடியும்.

இந்தச் சட்டத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு தேவையான வகையில் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றனர்.

திருகோணமலையில் புத்த சொரூபமொன்று சேதமாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டு அழிக்கப்பட்டிருப்பதை பத்திரிகையில் கண்டேன். இப்படிப்பட்டசம்பவங்கள் இடம்பெறுகையில் எமது ஆட்சியாளர்கள் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

இதனை எம்மால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறு மௌனம் காத்து வந்தால் சட்டத்தை மக்களே கையிலெடுப்பார்கள்.

இது தான் நடக்கும். ஆகவே ஆளுங்கட்சி, முப்படையினர், பொலிஸார் என்ற வகையில் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பௌத்த தேரர்களுக்கு தாக்குதல், இடையூறுகளை ஏற்படுத்தும் போது திருப்பியடிக்க மாட்டார்கள். ஆனாலும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள்.

அதனால் இது மிகப்பெரிய அழிவாகவும், கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும்.

நான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை குருதி ஆறு ஓடும் தேசமாக மாற்றிவிட வேண்டாம்.

கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்து விட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை.ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments