பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் எழுக தமிழில் பங்கேற்போம் - தென் கயிலை ஆதீனம் அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி யாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் இனம் என்ற ரீதியில் எழுக தமிழ் பேரணியில் பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென, தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பண்பாடிழந்து, பொருளாதாரமிழந்து தமிழ் சமூகத்தின் இருப்பினை இழந்து சொல்லொனாத் துயரை அனுபவித்தபடி இருக்கின்றோம். எங்களுடைய நிலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் கலை-கலாசார-பண்பாடு யாவும் சீரழிக்கப்பட்டு எமது இருப்பினைத் தொலைத்துக் கொண்டிருகின்ற இத்தருணத்திலே யாழ் மண்ணில் எழுக தமிழ்-2019 பெருநிகழ்வு நடைபெறவுள்ளது. எல்லாத் தமிழர்களும் தமிழ் இனம் என்ற ரீதியிலே நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் சகல பேதங்களையும் மறந்து பேரெழுச்சியுடன் பங்குபற்ற வேண்டியது தமிழர்களாகிய எமது கடமையாகும்.

தமிழன் என்ற சொல்லிற்கு அர்த்தம் கொடுக்க நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் இந்நிகழ்விலே பங்கேற்க வேண்டும். எங்களது வருங்கால சந்ததியின் இருப்பினை உறுதிபடுத்த இந்நிகழ்விலே யாவரும் பங்குபற்ற வேண்டும்.

கன்னியா வெந்நீரூற்று பிரச்சினை, செம்மலை நீராவியடிப் பிரச்சினை மற்றும் தென்னைமரவாடி பிரச்சினை போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும், நாம் அனைவரும் உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் எதிர்கொண்டு எங்களுடைய மண்ணினது இருப்பினையும் எமது எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எந்தவித பாகுபாடும் இன்றி, எந்தவித வேறுபாடும் இன்றி, எந்தவித பகையும் இன்றி ஒருமித்த உணர்வோடு நடைபெறவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியில் பங்கேற்போம் என தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரியும் அதனை தேசமாக தமிழர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடும் வகையில் நேற்று தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருடன் தமிழ் மக்கள் பேரவையினர் சந்திப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments