தமிழ் மக்களின் ஆதங்கத்தை எழுக தமிழ் வெளிக்காட்டியது - சிவமோகன்


இந்த நாட்டில் அனைவரும் சமம் என்பதை செயற்படுத்தக் கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு பதில் அளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று அனைவரது கவனமும் ஜனாதித் தேர்தல் தொடர்பில் இருக்கிறது. தமிழ் மக்கள் தக்களது ஆதங்கங்களை எழுக தமிழ் மூலம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாயகம், தேசியம், சுயநிர்ணம் ஆகிய மூன்று கருத்துக்கனைள நோக்கிய நகர்வில் தான் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு என்பது எமது தாயகம். நாங்கள் வாழ்ந்த மண்.

இன்று ஒப்பீட்டளவில் பார்க்கும் போது எமது நிலத்தில் பெரும்பகுதி வயல்கள், காடுகள், நீர்நிலைகளாக தான் இருக்கின்றன. சிறிய பகுதியில் தான் மக்கள் வாழ்கிறார்கள். இதனால் அரசு தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றை வைத்துக் கொண்டு எமது மக்களின் காணிகளை அபகரிக்க முயல்கிறார்கள். மாறி மாறி வரும் சிங்கள அரசுகள் மக்கள் மீதான அழுத்தத்தை குறைத்ததாக தெரியவில்லை.

அனைவரும் சமம் என்று சொல்பவர்கள் சிங்கள அதிகாரிகளையும், சிங்கள ஆட்சியையும் வைத்துக் கொண்டு எமது மக்களின் வாழ்வியல், வாழ்வாதாரம், உரிமைகள் என்பவற்றில் கைவைத்து வருகிறார்கள். இவை எல்லாவற்றையும் விலக்கி அனைவரும் சமம் என்பதை செயற்படுத்தக் கூடிய ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது தான் எனது கருத்து. மக்கள் இந்த விடயத்தில் தீர்க்கமான சரியான முடிவெடுப்பர் எனத் தெரிவித்தார்.

No comments