திரு. பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பு


பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பொறுப்பாளர் தனம் என்று அழைக்கப்படும் திரு. பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பட்டுள்ளார். இவரது மதிப்பளிப்புக் குறித்து அனைத்துலகத்
தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
18.09.2019

தமிழீழ விடுதலைப் புலிகள் - பெல்ஜியம் கிளையின்  நீண்டகாலப் பொறுப்பாளர் திரு. பொன்னையா தனபாலசிங்கம்  அவர்கள், கடந்த 16.09.2019 அன்று உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயகத்திலிருந்து பெல்ஜியத்திற்கு 2001 இல் புலம்பெயர்ந்ததிலிருந்து தாயகவிடுதலைக்கான பங்களிப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.   மேலும்  2004 ஆம் ஆண்டில் சுனாமிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தாயகமக்களிற்கு உதவுவதற்காக தீவிரமாக  செயற்பட்டவர். இதே ஆண்டின் இறுதியில் தாயகவிடுதலைக்கான ஒரு செயற்பாட்டாளராக, எமது அமைப்பின் பெல்ஜியக்கிளையில் தன்னை இணைத்துக்கொண்டவர்.   இவரது  தீவிரமான செயற்பாட்டின் மூலம் குறுகிய காலத்தில் 2006 இல் அன்வேர்ப்பன் மாநிலப் பொறுப்பாளராக   நியமிக்கப்பட்டார்.

தமிழீழ விடுதலைக்கான அவசர கால வேலைத்திட்டங்களின் போது கூட இவரது அயராத  உழைப்பும், பங்களிப்பும்  இருந்து வந்துள்ளது. எதிரிகளின் பலத்த சவால்களுக்கு நடுவில் புலம் பெயர் தேசத்தில் அனைத்து மாவீரர்களுக்குமாக தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பதிக்கப்பட்ட முதலாவது நடுகல்லினை பெல்ஜியம் நாட்டில் நாட்டுவதற்கு திரு.தனபாலசிங்கம் அவர்கள் அரும்பாடுபட்டார்.

அத்துடன் விளையாட்டு, கல்வி, கலை, அரசியல்துறைகளுக்காக பல உப கட்டமைப்புகளை உருவாக்கினார். பெல்ஜியம் வாழ் தமிழீழ மக்களை ஒருங்கிணைத்துத் தாயக விடுதலைப் பணியில் ஈடுபடுத்தினார்.  இளையோர்களை ஒருங்கிணைத்து ஒழுக்கமுற தாயகப் பற்றோடு வளர்த்து எம் தலைமுறையினரை  தேசத்திற்காக வழிப்படுத்தியவர். அவரது மூச்சுக்காற்றில் தாயக விடுதலை உணர்வே எப்போதும் கலந்திருந்தது.
 
இவரது ஆற்றலும், ஆளுமையும், தாயகப்பற்றுறுதியும் எப்போதுமே திடமானவை. 2009ம் ஆண்டில் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பெல்ஜியம். நாட்டில் எதிரிகளின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது தமிழீழ விடுதலையே தன் வாழ்வென எண்ணித் தன்னையும் தன் குடும்பத்தினரையும் அர்ப்பணித்தவர்.

புலம் பெயர் தமிழர் வரலாற்றில் பெல்ஜியம் நாட்டில் திரு.தனபாலசிங்கம் அவர்களின் விடுதலைச் செயற்பாடுகள் தமிழீழ வரலாற்றில் இடம்பெறும் என்பது திண்ணம். இன்று இந்நாட்டில் தொடரப்படுகின்ற தாயக விடுதலைப் பணிகளுக்கு இவரின் பங்களிப்பு ஒரு விதையாகவே இருந்துள்ளது. துன்பதுயரங்கள் வருத்தியபோதும் தளராமல் ஓய்வின்றி, தாயகவிடுதலைக் கனவோடு பணியாற்றிய மகத்தான மனிதனை இழந்து தவிக்கும் அவரது உற்றார், உறவினர், நண்பர்களின்  துன்பத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அவர்களுக்கு எமது ஆறுதலையும்  தெரிவித்துக்கொள்ளுகின்றோம். திரு.பொன்னையா தனபாலசிங்கம் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று, எம் தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பையும் மதிப்பளித்து “மாமனிதர்” என்ற அதியுயர் தேசியவிருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர்மண்ணில் தன்னையும்,  தன் குடும்பத்தினரையும் இணைத்து உணர்வோடு, என்றும் உறுதிதளராத மனதுடன் இறுதிவரை பணிசெய்த மகத்தான தேசப்பற்றாளனை தமிழீழம் என்றும் போற்றி நிற்கும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
No comments