பிரான்சில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கரின் நினைவேந்தல்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தலும்  இன்று (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு
ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆர்ஜொந்தை தமிழ்ச் சங்க கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திருமதி கல்பனா வசந்தராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.

பிரெஞ்சு தேசத்தின் தேசியக்கொடியை பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்Philip Doucet அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை ஆர்ஜொந்தை தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் ஞானசீலன் நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 02.11.1987 அன்று கொக்குவில் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் ஜெயராம் (மோகன்ராம்) அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 2009 இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர் திவ்வியராஜ் (உருத்திரன்) அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கான சுடரினை ஆர்ஜொந்தை நகரபிதா Georges Mothron அவர்கள் ஏற்றிவைக்க, தூபிக்கான மலர்மாலையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் அணிவிக்க, தியாகதீபம் திலீபன் அவர்களின் திருஉருவப்படம், கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படம் ஆகியவற்றிற்கான மலர்மாலைகளை நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களின் துணைவியார் அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவிகளின் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த எழுச்சி நடனத்தோடு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான உரை இடம்பெற்றது. அவர்தனது உரையில், 32 வருடங்களுக்கு முன்னர் தம்பி திலீபன் தமிழ் மக்கள் விடுதலை அடையவேண்டும் என்பதற்காக தனது பசியை அடக்கிக்கொண்டு, அந்த விடுதலைப் பசிக்காகத் தனது உயிரை ஈகம் செய்தான். அதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், மக்கள் அந்த விடுதலைப் பசியோடு, தமது பசியைத் தீர்க்கமுடியாத சூழலில் தமது உயிர்களை நீத்தார்கள். அந்தப் பசி இன்றும் எங்களுக்கு இருக்கின்றது. அந்த விடுதலைக்கான பசி, அதை அடையவேண்டும் என்ற அவா, தொடர்ந்து எங்களின் இரத்தத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. ஆகவே எமது போராட்டத்தின் செயற்பாடு இன்று இவர்களுக்கு எவ்வாறு வணக்கம் தெரிவிக்கின்றோமோ, எவ்வாறு இவர்களை நினைவுகூருகின்றோமோ, அதே வழியில் இவர்கள் கண்ட அந்தக் கனவை, தமிழர்களுக்கான விடுதலையை, தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற அவாவை முன்னெடுக்க நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டுக் குரல்கொடுக்கவேண்டிய காலகட்டம் இது என்பதாக அவருடைய உரை தொடர்ந்தது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் Philip Doucet அவர்களும் எமது மக்களின் போராட்டம் தொடர்பில் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

கொலம்பஸ் தமிழ்ச்சோலை மாணவர்களின் தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த கவிதை, பேச்சு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவர்கள் மற்றும் ஆசிரியையின் தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த கவிதை, பேச்சு, ஆர்ஜோந்தை தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் ஞானசீலன் நிதர்சன் அவர்களின் பிரெஞ்சுமொழியிலான பேச்சு போன்ற நிகழ்வுகளோடு, தமிழ்ச்சோலை மாணவர்கள் மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் அனைவரின் மனங்களையும் மெய்மறக்கச்செய்திருந்தன. தொடர்ந்து நிகழ்வுகளின் நிறைவாக ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவிகளின் 'என்னோடு ஆடடா தன்மானப் போரடா..." பாடலுக்கான எழுச்சி நடனம் சிறப்பாக இருந்தது. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தபோது அரங்கில் தமிழீழத் தேசியக் கொடிகளை அசைத்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்ததுடன், அந்தவேளை வானத்திலே வானவில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பிரெஞ்சுத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.

No comments