"ஓரணியில் எழுவோம்" எழுக தமிழுக்கு அழைக்கிறார் குகதாஸ்


எழுக தமிழ் நிகழ்வில் அனைவரும் ஓரணியாக திரண்டு எழ வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், ரெலோ முக்கியஸ்தருமான சபா.குகதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான அவரது முகநூலில் பதிவில்,

எழுக தமிழ் மூலம் ஈழத் தமிழரின் ஒன்றுபட்ட குரலை உலக நாடி நரம்புகளில் பாய்ச்ச கட்சிக் காய்ச்சல்களை விட்டு தமிழர் ஒரு தேசிய இனம் என்ற இனமான உணர்வுடன் ஓரணியில் ஒன்றிணைவோம்.

எழுக தமிழ் முன்வைத்த ஆறு கோரிக்கைகள் கட்சிகளுக்கு சொந்தமானவை அல்ல இன்றைய எமது இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் இனத்திற்கு ஆபத்தான நிலைகளை சீர்செய்து இனத்தின் இருப்பை நிலை நிறுத்துவதற்கு ஒரே குரலில் ஒன்றாக ஓரணியில் கையாளப்பட வேண்டியவை அதனால் வடக்கு கிழக்கு தாயக உறவுகள் அனைவரும் ஒருநாள் சிலமணி நேரத்தை அர்ப்பணிக்க உளப்பூர்வமாக தயாராகுங்கள்.

தற்போதைய நமது இனத்தின் நிலையில் இங்குள்ள கட்சிகளில் உண்மையான தியாகிகள் வீரபுருசர்கள் என்று எவரும் பெயர் குறிப்பிடக் கூடிய வகையில் இல்லை. அத்தகைய தகுதி உடையவர்கள் விடுதலை வித்துக்களாய் புனித பூமியில் உறங்கிய வண்ணம் உள்ளனர். ஆகவே வறட்டுக் கௌரவங்களை தூக்கி எறிந்து விட்டு மக்களின் சேவகராக இருக்கும் தகுதியை வெளிப்படுத்த மக்களே எங்கள் எஐமானர்கள் என்பதை வெளிப்படுத்த ஓரணியில் ஒரே குரலுடன் இணைந்து ஒலிக்க ஒன்றிணைவோம்.

தமிழ்தேசியம் என உச்சரிக்கும் மானத் தமிழர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளையும் கிரகித்தால் தாம் பயணிக்கும் பாதையில் இவைதான் முதன்மையானவை என்பதை மறுக்கமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments