சரிவுகளை சந்தித்துவரும் கனடா ஆளும் லிபரல் அரசு

கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ந் திகதி நடைபெறவூள்ளது. கனடாவின் பெரும் அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களை முழுவேகத்தில் நடத்தி வருகிறார்கள்.

கனடாவின் நடப்பு அரசாங்கத்தை வைத்திருக்கும் லிபரல் கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு பெரும் சவாலாக அமைகிறது. குறிப்பாக விலைவாசி, வரி அதிகரிப்புக்கள், புதுவகை வரிகள் என்பன நடுத்தர மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகின்றன. லிபரல் கட்சிமேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சலிப்பினை மற்றைய கட்சிகள் தமக்குச் சாதகமாக்கி பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக, கடந்த தேர்தலின்போது லிபரல் கட்சிக்கு அமோக வாக்குக்களை தந்த வாக்காளர்கள் இம்முறை கனடாவின் பிரதான எதிர்கட்சியான கொன்சவேடிவ் கட்சிக்கும் மற்றும் என்.டி.பி. கட்சிக்கும்  சாய்வதை கருத்துக் கணிப்புக்கள் துல்லியமாக எடுத்துரைக்கின்றன.

நடப்பு அரசாங்கமும், அதை வைத்திருக்கும் லிபரல் கட்சியினரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகப்பேரை வரவேற்பதாலும்  கனடியரிடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. லிபரல் அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்குச் சாதகமான குடிவரவுக் கொள்கைகளை வைத்திருப்பதால் உருவாகிவரும் குடிசன அதிகரிப்பு விகிதங்களும், பல பாதுகாப்பு பிரச்சனைகளும் இந்தத் தேர்தலின்போது கனடியர்களிடையே பேசப்பட்டு வருகின்றன.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களின் செல்வாக்கை மேலும் குறைக்கும் விதத்தில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. ஜஸ்ரின் ட்ரூடோ தனது முகத்தில் ஆபிரிக்கர்களைப்போல கறுப்பு நிற மையை பூசியவாறும் இந்தியர்களைப்போல பழுப்பு நிறத்தைப் பூசியவாறும் நிற்கும் நிறவெறி படங்களை டைம் சஞ்சிகை வெளியிட்டு புதிய தலையிடியை லிபரல் கட்சிக்கு உருவாக்கியிருக்கிறது.

நிறவெறியை ஆதரிக்கும் வகையிலும், கறுப்பு, பழுப்புத் தோல் கொண்ட மக்களை அவமதிக்கும் வகையிலும் அந்தப் படங்கள் இருப்பதாகச் சொல்லி நிறவெறி எதிர்ப்பாளர்கள் தமது ஆட்சேபனைகளை  ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு எதிராக எழுப்புகின்றனர். தனது முகத்தில் கறுப்பு நிறத்தை பூசியவாறு படங்களை எடுத்தது தவறுதான் எனவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஜஸ்ரின் ட்ரூடோ கடந்த வாரம் அறிவித்தார்.  மேலும் அவர் பகிரங்கமாக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மன்னிப்பும் கோரியுள்ளார்.

ஏற்கனவே வெளிவந்த படங்களைப்போல வேறு நிகழ்ச்சிகளிலும் வெள்ளையரல்லாத இனத்தவரை அவமதிக்குமாறு நடந்ததுண்டா? என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ஜஸ்ரின்  தொடர்ந்து பதிலளிக்க மறுத்து வருவதும்  சர்ச்சையை அதிகரித்திருக்கிறது.  இதுவும் ஜஸ்ரின் ட்ரூடோ மீதான கனடியர்களின் அபிமானத்தை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கிறது. இதுபோன்ற படங்கள், வீடியோக்கள் இன்னும் வெளிவரலாம் என்றும் இப்போது நம்பப்படுகிறது.

ஆகமொத்தமாக பல்வேறு சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நடப்பு அரசாங்கமும், அதை வைத்திருக்கும் லிபரல் கட்சியினரும் இம்முறை தேர்தலில் பலத்த அடி வாங்கிக் கொள்ளும் நிலை வந்திருக்கிறது.

கனடிய வாக்காளர்கள் எடுக்கப்போகும் முடிவுகளை அறிய ஒக்டோபர் 21 வரை நாம் காத்திருக்கவேண்டும்.

No comments