தமிழ் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாமலே தேரர்கள் அடாவடி! அரவிந்தகுமார்


முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த தேரர் ஒருவரின் சடலம் எரியூட்டமையின் ஊடாக நீதிதுறை அவகௌரவப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயக் கேணிப் பகுதியில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து அறிக்கை ஒன்று விடுத்து இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளார்.

குறித்த செயற்பாடு சிறுபான்மை மக்களின் உணர்வுகளையும், அவர்களின் உரிமைகளையும் கொச்சை படுத்தும் செயற்பாடு எனவும் நீதிமன்ற உத்தரவை மீறியதன் ஊடாக நீதித்துறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் பகுதி நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்ற கீழ் மட்ட எண்ணம் தோற்றியமையே அவ்வாறு பௌத்த பிக்குகள் செயற்பட காரணமாக அமைந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு எனவும், தான் தோன்றிதனமாக எமது நாடு என்ற இருமாப்போடு மற்றைய மதத்தவர்களின் மனதை புரிந்துக்கொள்ளாது மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் இன ஒற்றுமைக்கு முற்றாக குந்தகம் ஏற்படுத்தும் எனவும் ஆகவே இதனை முளையிலேயே கிள்ளிவிட்டு தமிழ் மக்களுக்கான நீதி நியாயம் கிடைக்க ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை என்பது அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு எனவும் தனிபட்ட ஒருவர் அல்லது அமைப்பு இவ்வாறு நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்களை செய்வதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

No comments