தேரர்களின் அடாவடிக்கு எதிராக மன்னாரில் போராட்டம்


செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடலைத் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. குறித்த தடை உத்தரவை மீறி   ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல்  தகனம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் சட்டத்தரணிகள்,பொது மக்கள் தாக்கப்பட்டுள்ளமையினை கண்டித்து இன்று (27) காலை மன்னாரில் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.

இதன் போது நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு, மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரை பகுதியில் பிக்குவின் உடலம் தகனம் செய்யப்பட்டமை , நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்தமை, சட்டத்தரணி, பொது மக்கள் தாக்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தகோரி குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதே வேளை மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம்  நான்காவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments