காஷ்மீர் இருண்டு கிடக்கிறது; நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பிடம் முறைப்பாடு

காஷ்மீரில் இந்திய அரசு அமுல்படுத்தியுள்ள தொலை தொடர்பு தடையை நீக்க வலியுறுத்துமாறு டிரம்பிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்ற மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் அந்தப் பகுதியை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க உத்தரவிட்டது.    இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில்  வைக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொபைல் மற்றும் இணையச் சேவை முடக்கம் தொடர்வதற்காக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இதனால் பல நோயாளிகள் தங்களது அவசியத் தேவையான மருந்துகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.  அத்துடன் காஷ்மீரில் வசிக்கும் உறவினர்கள் பற்றி வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எவ்வித தகவலும் தெரியாத நிலை உள்ளது.   இது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க செனட்டர்கள் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதி உள்ள கடிதத்தில், “காஷ்மீர் மாநிலத்தில்  கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாகத் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.   எனவே காஷ்மீர் இருண்ட நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.   நாட்கள் செல்லச் செல்ல காஷ்மீர் மக்களின் நிலை மோசமாகி வருகிறது.
இது குறித்து நீங்கள் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச வேண்டும்.  நீங்கள் மோடியிடம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கடை அடைப்பு, தொலைத் தொடர்பு தடை,  ஊரடங்கு  சட்டம் உள்ளிட்டவற்றை விலக்கிக் கொள்ள வலியுறுத்த வேண்டும்.  அத்துடன் பயங்கரவாதத்துக்குத் துணை போவதைப் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

No comments