சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் - ஐநாவில் கஜேந்திரகுமார்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரை செய்வதே சிறிலங்காவில் குற்றவியல் நீதியை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐநாவில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடரின் பொது விவாதத்தில் விடயம் 5 ன் கீழ் அவர் உரையாற்றும்போது...

இதுவரை காலமும் வெளிவந்த அறிக்கைகளுள் இலங்கை மீது பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வெளிவந்த ஒரு அறிக்கை, ஐநா மனிதஉரிமைகள் பேரவை ஆணையாளரின் சிறிலங்கா மீதான அலுவலக விசாரணை அறிக்கையாகும்.
சிறீலங்காவில் இழைக்கப்பட்ட மிகப் பாரதூராமான குற்றங்கள் மற்றும் இவை தொடர்பில் நீதிவழங்குதலில் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையின் ;செயல்ப்பட முடியாத தன்மை போன்றவற்றினால், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமானது சிறீலங்காவில் ஒரு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையொன்றை பிரேரித்திருந்தது.
ஆனால், சிறிலங்கா மீதான ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணை அறிக்கையை தொடர்ந்து நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 இலக்க தீர்மானத்தில், வேண்டுமென்றே 'கலப்புப் நீதிமன்றம்'' எனும் பதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அன்றில் இருந்து ,கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை சிறிலங்கா அரசானது முழுமையாக நிராகரித்ததோடு மட்டுமல்லாது, சிறிலங்காவின் மிக உச்சநிலை அதிகாரம் மிக்க பொறுப்புகளை வகிக்கும் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆகியோர், 'எந்தவொரு படையினரும், எந்தவொரு நீதிமன்றிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட  மாட்டார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

இத்தகய கள யதார்த்தத்தை கருத்தில்க் கொண்டு, ஐநா மனித உரிமைகள் பேரவையானது 40 வது கூட்டத்தொடரின்போது, குற்றவியல் நீதியை பெற்றுக்கொள்வதற்காக , இந்த மனித உரிமை பேரவை எனும் அமைப்பையும் தாண்டிச்சென்று சாத்தியமான அனைத்து வழிகளையும் கவனத்தில்  எடுக்குமாறு தனது உறுப்புநாடுகளை கேட்டுக்கொண்டது .

இந்த பின்னணியில், யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளாகிய நிலையில் சிறிலங்காவில் குற்றவியல் நீதியை பெற்றுக்கொள்வதற்கான   ஒரே வழி, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றிற்கு பரிந்துரை செய்வது மட்டுமே என இனப்படுகொலைக்கு உள்ளாக்கபட்ட தமிழ் மக்களின் பிரதிகளாக இந்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை மிகவும் உறுதியாக கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

No comments