தோல்வியோடு முடிந்தது விக்ரம் லேண்டரின் ஆயுள்!

நிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம், இன்றுடன் முடிகிறது. அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. அதனுள் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய மூன்று கருவிகள் வைத்து அனுப்பப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கும் போது  2.1 கிலோ மீட்டர் தொலைவில்  விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். இதில் அமெரிக்காவின் நாசாவும் களம் இறங்கியது. ஆனாலும் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. 
இந்நிலையில், இன்று முதல்,14 புவி இரவுகள்,  நிலவின் தென் பகுதியில் துவங்க உள்ளதாகவும், அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனாலும் நிலவை சுற்றி பயணித்து, ஆர்ப்பிட்டரின் தனது ஆய்வை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments