வடகிழக்கு இணைப்பினை வலியுறுத்தும் சுரேஸ்


வட- கிழக்கு இணைப்பை மீளவும் கொண்டுவருவதில்  இந்திய அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
எழுக தமிழ்ப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போன்று வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகமென்பது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டு 18 வருட காலம் வட- கிழக்கு இணைந்த ஒரு மாநிலமிருந்தது. அந்த மாநிலம் மீள உருவாக்கப்பட்டால் தான் தமிழ்மக்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள். வட- கிழக்கு இணைப்பு ஒருதலைப்பட்சமாகத் தற்போது மறுதலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மக்களின் புராதன இடங்களான கன்னியா வெந்நீரூற்று, முல்லைத்தீவு நீராவியடிப்பிட்டிப் பிள்ளையார் ஆலயம், நெடுங்கேணி வெடுக்குநாறிமலை போன்ற தமிழ்மக்களின் புராதன இடங்களெல்லாம் பெளத்த பிக்குகளால் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு புதிய புதிய புத்தர் சிலைகள், பெளத்த விகாரைகள் அமைப்பது மாத்திரமல்ல. அதனைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்படுகின்றன. இதன்மூலமாகத் தமிழ்மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் விடயம் மிகத் தீவிரமாகத் தற்போது வடக்குமாகாணத்தில் இடம்பெற்று வருகிறது. இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நடைபெறுகின்றன.
இதன்மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய வடக்கு மாகாணத்தில் அவர்களைச் சிறுபான்மையாக மாற்றி அவர்களின் அடையாளங்களை அழித்து தேசிய இனமென்ற நிலையிலிருந்து மாற்றித் தமிழர்களை இல்லாதொழிப்பதற்கான முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ளன.
இவையெல்லாம் அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனப்படுகொலையாகவே, எம்மால் கருத முடிகிறது. இவ்வாறான இனப்படுகொலையிலிருந்து தமிழ்மக்களையும், மண்ணையும் காப்பாற்ற வேண்டும், தமிழ்மக்களின் புராதன சின்னங்கள், கலாசாரங்கள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரம் தான் தமிழ்மக்கள் இந்த மண்ணில் ஒரு தேசிய இனமாக தலைநிமிர்ந்து வாழ முடியும். அந்த அடிப்படையில் தான் தமிழ்மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள எழுகதமிழ் பேரணியில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் இவ்வாறான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம் ஜெனீவாவில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்தவிடங்களில் மீளக் குடியமர்த்துவதாகவும் கூறினார்கள். ஆனால், அவர்கள் கூறிய நான்கு விடயங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை
சர்வதேச சக்திகள் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு ஆதரவாகவிருந்தது. எமது ஆயுதப் போராட்டம் தமிழ்மக்களின் பாதுகாப்பிற்கான போராட்டம். இந்நிலையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டமாக இலங்கை அரசாங்கத்தால் கொச்சைப்படுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்பின்னரான தற்போதைய நிலைமையை நோக்கினால் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களும் ஓர் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையிலிருந்து தமிழ்த்தேசிய இனம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்மக்கள் சுதந்திரமாக, நிம்மதியாக, கெளரவமாகத் தமது மண்ணில் வாழ வேண்டும். தமிழ்மக்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments