ஒரே நாளில், பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கில் கிளர்ந்து எழுந்த தமிழக மக்கள்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்:
மத்திய பாஜக அரசு, மக்களை பழிவாங்கும் வக்கிர நோக்கோடு இயற்றியுள்ள கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கும்பல் படுகொலைகளை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் மனிதநேய மக்கள் கட்சியும் இணைந்து இன்று (25.08.2019) சென்னை, மதுரை, திருச்சி மற்றும் திருப்பூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பி.எஸ். ஹமீது, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பி.எம்.ஆர். சம்சுதீன், துணைப் பொதுச் செயலாளர் எம். யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் து. ரவிக்குமார் எம்.பி., மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கிறிஸ்த்தவ நல்லெண்ண இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து, கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்திப் பேசினர்.
முத்தலாக் சட்டம்
முத்தலாக் சொன்னதாக, குடும்பச் சிக்கல் உள்ள எந்த ஓர் முஸ்லிம் ஆணையும் சிறையிலிட்டு, பெண்ணைத் தவிக்கவிட்டு, குடும்பத்தைச் சீர்குலைக்கின்றது.
யு.ஏ.பி.ஏ.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் இந்தக் கறுப்புச் சட்டம் நீதியின் கோட்பாடுகளைக் காலில் போட்டு மிதிக்கும் நெறியற்ற சட்டமாகும்.
என்.ஐ.ஏ.
தேசியப் புலனாய்வு முகமை எனப்படும் மத்திய அரசின் இந்த அமைப்பு, தீவிரவாதத்தைத் தடுப்பது என்ற பெயரில் அரங்கேற்றி வரும் எதேச்சதிகார, நீதி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
காஷ்மீர் மறுநிர்ணயச் சட்டம்
இந்திய அரசியல் சாசனத்தின 370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்கியதோடு, காஷ்மீர் தலைவர்களையும் சிறையில் அடைத்துவிட்டு, காஷ்மீர் மக்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்திக் கொண்டு, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்திருப்பது மதவெறி என்னும் நஞ்சு மத்திய அரசின் நெஞ்செல்லாம் நிறைந்து வஞ்சம் புரிந்து வருவதற்குப் போதிய ஆதாரமாகும்.
கும்பல் கொலைகள் பசு மாட்டின் பெயராலும், ஜெய்ஸ்ரீராமின் பெயராலும் முஸ்லிம்களைக் கும்பல் படுகொலை செய்து அதைக் காணொளியாகப் பரவச் செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு மத்திய அரசும், மாநில பாஜக அரசுகளும் மறைமுக ஆதரவளித்து வருகின்றன.
ஒரு நாடு அதன் அரசியல் சட்டத்தால் ஆளப்பட வேண்டும். அனைத்தும் மக்களின் நல்வாழ்வே அந்தச் சட்டத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். இந்த அடிப்படைக்கு முரணாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கறுப்புச் சட்டங்களை கண்டித்தும் இச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக போராட்டத்தின் எழுச்சியலைகள் தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை

திருச்சி

திருப்பூர்

மதுரை 
 

No comments