மக்கள்மீது காவல்துறை தாக்குதல்! தலை விவகாரத்தால் மட்டக்களப்பில் பதற்றம்;

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மொஹமட் நாசர் மொஹமட் அசாத்தின் தலை மற்றும் பாதங்களின் பாகங்கள் மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வரின் அனுமதியுடன் நேற்று மாலை இரகசியமாக புதைக்கப்பட்டதாக தெரிவித்து திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் மீது இன்று (27) சற்றுமுன் கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டுதாரியின் தலை விவகாரத்தினால் கள்ளியங்காடு மயானப் பகுதியில் இன்று மாலை வியாழேந்திரன் எம்பியின் தலைமையில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது டயர்கள் எரித்து வீதி மறியல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருகோணமலை - மட்டக்களப்பு பிராதன வீதியை மறித்த இளைஞர்கள் இன்று மாலை முதல் 9 மணி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு பாதுகாப்பு தரப்பினர் எச்சரித்தனர். எனினும், வீதி மறியலை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்ததை தொடர்ந்து சற்றுமுன்னர் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதலின் போது நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று அறிய முடிகிறது.
# மட்டக்களப்பு #மொஹமட் அசாத்

No comments