உங்கள் தேவைக்காக அலுவலகம் திறந்தீர்களா? சிணம் கொண்ட உறவுகள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை யாருக்காக யாரின் ஒத்துழைப்புடன் திறந்தீர்கள் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வவுனியா சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இன்று (24) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும்,

சர்வதேசத்துக்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை. நாம் குறித்த அலுவலகத்தை எதிர்த்து போராடியபோதிலும், நீங்கள் யாருடைய அனுமதியும் இன்றி திறந்துள்ளீர்கள்.

இது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திறக்கப்பட்டதா அல்லது வேறு யாருக்காகவும் திறக்கப்பட்டதா, பட்டப்பகலில் திறக்க வேண்டிய பிராந்திய அலுவலகத்தை அதிகாலையில் திறக்க வேண்டிய தேவை என்ன?. எங்கள் உறவுகளுக்கு நீதியைத் தேடி தரப் போகின்றீர்களா இல்லாவிட்டால், உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதனை திறந்தீர்களா என, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரை பார்த்து கேட்கின்றோம்.

நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்துக்காகவோ சுகபோகத்துகாகவோ போராடவில்லை. எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றது. எனினும், நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தினை மிகவும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

இந்நிலையிலேயே, நாம் எதிர்வரும் 30ம் திகதி பாரியளவிலான போராட்டமொன்றை முன்னெடுக்கின்றோம். வவுனியா - பன்றிக்கெய்தகுளத்தில் இருந்து எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளோம். என்றனர்

No comments