புத்தரை வைத்து அன்புப் போதனை மீறப்பட்டது

பௌத்த தேரர்களுக்கு அச்சப்பட்டு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீறி சட்டநடவடிக்கை எடுக்கும் வகையில் எமது நாட்டின் சட்டத்தை நடை முறைப்படுத்துபவர்களாக பொலிஸார் மாறியிருப்பதை வருந்தத்தக்க - அச்சப்பட வேண்டிய ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். இந்தப்போக்கு மென்மேலும் வளர்ந்து சென்றால் தேரர்கள் எந்தப் போலிக் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் இன, மதப் புண்படுத்தலற்ற விடையத்தை பூதாகரமாக்கி முரண்டு பிடித்தால் அவர்களுக்கு அச்சமடைந்து அப்பாவிகள் மீது உடனடியாக சட்டத்தை நடை முறைப்படுத்தும் நிலைமை அதிகரித்து விட வாய்ப்புக் காணப்படுகின்றது.

அத்தகைய சம்பவங்கள் கடந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்தேறின. அண்மையிலும் நடந்தது. அதுபோல்த் தான் நேற்று திருகோணமலையில் ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தது. சேலையில் புத்தரின் முக உருவம் இருந்தது என்பதற்காக தேரர் ஒருவர் உள்ளிட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் அச்சேலையை அணிந்திருந்த பெண்ணுடன் முரண்பட்டு அவரைக் கைது செய்ய வைத்திருந்தனர்.

குறித்த பெண்ணுடன் முரண்பட்ட தேரர் "நீ ஒரு பெண் என்றதால விடுறன்" என்று அச்சுறுத்தும் வகையில் பதிலளிக்கிறார். இல்லையென்றால் கிழித்து வீசியிருப்பேன் இப்படியொரு அர்த்தத்தில் தான் தேரர் கூறினாரோ நாம் அறியோம். "உடுத்தும் போது பிரச்சினை வரும் எனத் தெரியாதா?" என்று மற்றொரு பெரும்பான்மையின நபர் அப்பெண்ணிடம் கேட்கிறார். தவறு என்பதை உணர்ந்து பிரச்சினையை சமாதானமாக முடித்துக் கொள்ளும் நோக்கில் குறித்த பெண் "தெரியாமல் அணிந்து விட்டேன்" என்று தேரரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருகிறார். அவருடன் மற்றுமொரு பெண்ணும் அதேபோல் மன்னிப்பு கோரினார். எனினும் கடும்போக்கு வாதம் நிரம்பிய தேரரிடம் புத்ததர்மம், அன்புப் போதனையப் பின்பற்றி மன்னித்துவிடும் துறவிக்குரிய மனம் இருக்கவில்லை. இதனால் அந்தப் பெண்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து சென்றிருக்கின்றனர்.

இலங்கையில் மத அடையாளம் காணப்படும் ஆடையை அணிவது குற்றம் எனச்சட்டம் இல்லை. ஆடை நிறுவனங்களின் எண்ணக்கருவில் மதம் சார்ந்த அடையாளத்துடன், அல்லது அதனை ஒத்த வகையில் ஆடைகளில் அலங்காரம் செய்கின்றனர். அப்படியிருக்கையில் தெரிந்தோ, தெரியாமலோ அத்தகைய ஆடைகளை அணியும் போது திட்டமிட்டு மத முரண்பாட்டை ஏற்படுத்த - மத நிந்தனை செய்ய முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டுவதும் தேரர்களின் கடும் போக்குச் சிந்தனைகளுக்கு அடிபணிந்து சட்டத்தைப் பயன்படுத்துவதும் அபத்தம்.

அரசியலமைப்பின் "அத்-III 12.(1)" சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாசகம் இவ் விடையத்தில் முற்றாக மீறப்ப(ட்டுள்ளது)டுகின்றது. பொலிஸார் நினைத்திருந்தால் மன்னிப்பு கோரிய போது சம்பவ இடத்தில் வைத்து சமாதானம் பேசி மேற்குறித்த வாசகத்தின்படி குற்றம் எனச் சொல்லப்படாத செயலுக்காக அப் பெண்ணின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கச் செய்து விடுவித்திருக்க முடியும். ஆயினும் தேரருக்கு ஆதரவானதாக மட்டுமே சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கப்பல்ச் சுக்கானை தர்மச்சக்கரமாகக் கருதி முஸ்லிம் என்பதற்காக கர்ப்பிணி என்றும் பாராமல் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கும் போது புத்தரின் முக உருவம் காணப்பட்ட சேலையை தெரியாமல் அணிந்துவிட்டார் என்பதை ஏற்று இரக்கம் காட்டுவார்கள் என்று நாம் நினைத்தால் அது எமது மடைத்தனமாகவே இருக்கும்!.

ஆடையில் இருப்பது மத அடையாளமா, மத அடையாளத்தை ஒத்த அடையாளமா, மத அடையாளம் இருக்கும் ஆடை அணிந்தால் பிரச்சினை ஏற்படுமா என்பதை அனைத்து மக்களும் தெரிந்து வைத்திருக்கப் போவதில்லை. பலர் தெரியாமலும், சிலர் விரும்பியும் அவற்றை அணிய நேரிடிலாம் ஏனெனில் அப்படி ஆடைகள் வடிவமைத்து சந்தைக்கு வரும் போது அவற்றை அணியக் கூடியது என்று தான் மக்கள் கருதுவார்கள். அப்படியிருக்கும் போது தனிநபரில் குற்றம்சாட்டுவது தேவையற்ற ஒன்றாகும். உங்கள் காட்டேறித்தமான கடும் போக்குவாதச் செயலுக்கு பதிலாக அத்தகைய ஆடைகளை அணியத் தடை என்று அறிவித்து விடுங்கள்!.

30.08.2019
ஞா.பிரகாஸ்

No comments