கூட்டமைப்பும் காணி விடுவிப்பில் நாடகமாடுகின்றது?


ரணிலை யாழ்ப்பாணம் அழைத்துவந்து இரந்து கேட்கும் நிலைக்கு கூட்டமைப்பு சென்றுள்ளதாவென கேள்வி எழுந்துள்ளது.கொழும்பில் சாதாரணமாக நாடாளுமன்றத்தில் பேசி தீர்க்க கூடியவற்றினை யாழில் ரணிலிடம் கோரிக்கை விடுத்து அதன் மூலம் இலவச ஊடக விளம்பரங்கள் பெற முற்பட்டுள்ளனராவெனவே கேள்வி எழுந்துள்ளது.  

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்கள் , தொழில் மையங்கள் மத வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தையும் உள்ளடக்கி எவருக்குமே தெரியாது கடந்த ஆட்சியில் 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை வனஜீவராசிகள் திணைக்களம் இரகசியமான முறையில் அரச இதழைப் பிரசுரித்து தனது ஆளுகைக்குள் எடுத்துக்கொண்டது. இதனால் இப் பகுதியில் வாழ்ந்த பல ஆயிரம் குடும்பங்கள் இருப்பிடத்தையும் மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் தொழில் வாய்ப்பையும் இழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு பல கட்ட முயற்சியின் பெயரில் அப் பகுதியில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிக்க குறித்த திணைக்களம் இணக்கம் தெரிவித்தது. இருப்பினும் அது இன்றுவரை இடம்பெறவில்லை.

இவ்வாறு இணக்கம் தெரிவித்தே 2 ஆண்டுகள் கடந்தபோதும் எந்த முன்னேற்றமும் கிடையாது. இதனால் 25ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிக்க குறித்த திணைக்களம் ஆவண செய்ய பிரதமர் உத்தரவிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வைத்து வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த திணைக்கள அதிகாரி இவ்விடயம் மீண்டும் அரச இதழ் வெளியீடு செய்ய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.அதற்காக மக்களின் கருத்தும் பெறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகள் இடம்பெற்று அரச இதழ் வெளிவரும் என்றார். 

சாதாரண அமைச்சு மட்டத்தில் தீர்க்க கூடியவற்றினை எதற்காக ரணிலை கூட்டிவந்து கூட்டமைப்பு செய்கின்றது? வனஜீவராசிகள் திணைக்களம் ரணிலின் கீழ் இல்லையாவென கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

No comments