சுடலையினையும் விட்டுவைக்காத சுமந்திரன்?


தேர்தல் அண்மித்துவருகின்ற நிலையில் தமது சாதனைகளாக அரசின் உதவிதிட்டங்களை காண்பிக்க கூட்டமைப்பு அதீத முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வீதி திறப்பு கட்டத்தை தாண்டி தற்போது சுடலை திறப்பு விழாவரை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முண்டியடித்து திறந்து வைத்துவருகின்றனர்.

அவ்வகையில் உடுப்பிட்டி எள்ளங்குளம் சுடலையினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் திறந்துவைத்துள்ளார்.உடுப்பிட்டி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் படையினரால் ஆக்கிரமிகப்பட்டுள்ள படைதளமாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்புறமாக உள்ள சுடலையினையே மீண்டும் சுமந்திரன் திறந்துவைத்துள்ளார்.

ஏற்கனவே ஆலய வீதி,கோவில் குளமென சித்தார்த்தன் முதல் சரவணபவன் என கல்லா கட்ட தற்போது போட்டிக்கு சுமந்திரன் சுடலை திறப்பில் களமிறங்கியுள்ளார்.

இதேவேளை சாவகச்சேரியில் வீதிக்கு கல் கொட்டும் நிகழ்விலும் எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்திருந்தார்.

இதனிடையே கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மக்கள் நலனில் எள்ளளவும் அக்கறையில்லை. எத்தனையோ நிதிகள் வடக்கிற்கு ஒதுக்கப்பட்டு பின்னர் பிற மாகாணங்களுக்கு மாற்றப்பட்ட வரலாறுகளும் உள்ளது.பல திட்டங்கள் இன்னும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.

உதாரணமாக 'மெகாபொலிஸ்' திட்டம். இவ்வளவு காலமும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு இப்பொழுது தான் பருத்தித்துறை கொடிகாமம் வீதி வேலை இடம்பெறுகிறது. பொன்னாலை பருத்தித்துறை வீதியின் முதல் இருபது கிலோமீற்றரும் இந்த நிதிக்குள் தான் ஆனால் இன்னமும் சரியாக ஆரம்பிக்கவில்லை. தேவையற்ற கால இழுத்தடிப்பு. கண்டி மற்றும் மேல்மாகாணம் காலி ஆகிய இடங்களில் இந்த திட்டத்தின் ஊடாக நிறைய வேலைகள் நிறைவு பெற்று விட்டன. 

அடுத்து ஐ ரோட் வீதி அபிவிருத்தி திட்டம். இது கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒரு திட்டம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஆறு மாகாணங்களில் எப்பவோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது. சில மாகாணங்களில் நிறைவடைந்தும் விட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட எமது இடங்களில் இன்னும் இல்லை. கிழக்கில் இப்பொழுது தான் மெல்ல மெல்ல ஆரம்பமாகிறது. வடக்கில் கேள்வி கோரல் இடம்பெற்று ஒருவருடம் ஆகிறது. இன்னும் ஆரம்பிப்பதாக தெரியவில்லை. இவையெல்லாம் உண்மையிலே எமது இந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமோ இல்லையோ உண்ணமையிலேயே புரியவில்லையென செயற்பாட்டாளர் ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

No comments