செஞ்சோலை கொடூரத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு - செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14) வள்ளிபுனத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி வைக்கத், தொடர்ந்து பொதுத் திருவுருவப் படத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச் சுடர் ஏற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மலர் மாலை அணிவித்தார்.

கொல்லப்பட்ட மாணவிகளுக்கான சுடர் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட செஞ்சோலை நினைவுத் தூபியும் திறந்து வைக்கப்பட்டது.

இதேநாள் 2006ம் ஆண்டு செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.

இந்தக் கொடூரத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

அப்பாவி மாணவிகளைக் கொன்று குவித்த அரசாங்கம் இன்று வரையில் தாம் புலிகளின் தளம் மீதே தாக்குதல் நடத்தினோம். பலவந்தமாக இணைக்கப்பட்ட சிறுவர் போராளிகளே கொல்லப்பட்டனர் என்று பொய்ப் பரப்புரை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments