கோத்தாவிற்கு தேவையாம்:பிள்ளையானை விடுவிக்க நடவடிக்கை?


மகிந்த தரப்பின் ஆதரவாளனாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிள்ளையானை மீண்டும் அரசியல் அரங்கினுள் கொண்டுவர காய்நகர்த்தல்கள் ஆரம்பமாகியுள்ளது.

அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலையை வலியுறுத்தி பேரணியென்று, மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அவரை விடுதலை செய்ய வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டுமென, இந்தப் பேரணியில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு, காந்திப்பூங்காவில் இருந்து பேரணி ஆரம்பமாகி, பிரதான வீதியூடாக நகர்புறத்தை ஊடறுத்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகம் வரை சென்றடைந்தது.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், கட்சியின் மகளிர் பிரிவு தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, கடந்த 4 வருடங்களாக விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments