வெட்டியாக வந்து போனார் மைத்திரி?


கோடிகளில் வடக்கு மக்களது வரிப்பணத்தை கொட்டி வடக்கிற்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி மேடைகளில் இருக்க கூட நேரமில்லாது ஓடோடி திரிந்த பின்னர் திரும்பியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் களத்தில் தற்போது வரை இல்லாதுள்ள மைத்திரி தனது இருப்பை தக்க வைக்க அனைத்து தரப்புக்களிற்கும் சமிக்ஞை விடுத்துவருகின்றார்.ஆனாலும் சாதகமான பதில் எந்த பக்கமிருந்தும் வராதுள்ள நிலையில் அவரது யாழ்.விஜயமும் உப்பு சப்பில்லாமல் போயுள்ளது.

தனக்கு ஆளுநர் கதிரை தந்த நன்றிக்கடனுக்கு வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் மைத்திரியை அழைத்து மூச்சுவிட முடியாத நிகழ்ச்சி நிரiலை தயாரித்திருந்த நிலையில் மைத்திரியால் வெறுமனே ஓடிக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.

சுமார் அறுபது இலட்சத்திற்கு மேல் நிதி செலவிடப்பட்டுள்ள திருநெல்வேலி நட்சத்திரவிடுதியொன்றில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் முகாமைத்துவ மாநாட்டில் வெறுமனே ஜந்து நிமிடங்கள் எட்டிப்பார்த்து வெளியேறியிருந்தார் மைத்திரி.

அதே போன்று கைதடியில் கூட்டுறவு வங்கி திறப்பு விழா நிகழ்விலும் சில நிமிடங்களே அவரால் செலவிட முடிந்தது.

இந்து ஆரம்ப பாடசாலை அதிபரது முன்னாள் அதிபரது நட்பிற்காக திறக்க வந்த ஜனாதிபதியால் அங்கும் சில நிமிடங்களே செலவிட முடிந்தது.

யாழ்ப்பாணமெங்கும் தனது குண்டு துளைக்காத ஏழு வாகனங்கள் சகிதம் ஓடிஓடி திரிந்தது தவிர அவர் செய்தது ஏதுமில்லையென்கின்றனர் உள்ளும் அவதானிகள்.

அவருடன் வந்திருந்த அமைச்சரோ வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார்- 2000 முதல் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென சவடால் விட்டு திரும்பினார். கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றபோதே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஓட்டுமொத்தத்தில் அவருக்கும் பலனின்றி யாழ்ப்பாண மக்களிற்கும் பயனின்றி கோடிகளில் அள்ளி வீசப்பட்ட செலவுகளுடன் மைத்திரியின் பயணம் அமைந்திருந்தது.

No comments