22 வயது இளைஞரை கைது செய்ய முப்படையை இறக்கிய சீனா!

சீனா மற்றும் ஹாங்காங் மக்களுக்கு இடையிலான போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. ஹாங்காங்கை எப்படியாவது தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடலாம் என்று சீனா நினைக்கிறது.

ஆனால் இதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் ஹாங்காங் மக்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். 2014ல் இருந்து ஹாங்காங் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் சீனாவுடன் இருந்தாலும் அதற்கு சில சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. அதாவது ஹாங்காங் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் சீனாவுடன் இருப்போம். ஆனால் எங்களுக்கு சட்டம் வேறு மாதிரி இருக்கும். எங்களுக்கு தனி அதிகாரம் கொண்டு ஆட்சியாளர்கள் இருப்பார்கள் என்று ஒப்பந்தம் செய்துதான் ஹாங்காங் சீனாவுடன் இணைந்தது.

சீனாவுடன் இணையும் போது ஹாங் காங் தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதை நீக்கும் பொருட்டு சீனா தொடர்ந்து சட்டம் இயற்றி வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் ஹாங்காங் மக்களை நாடு கடத்த உரிமை அளிக்கும் வகையில் சட்டம் இயற்றவும் சீனா முயன்று வருகிறது.

இதன் மூலம் ஹாங்காங்கில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எளிதாக நாடு கடத்த முடியும். சீனாவிற்கு எதிராக பேசும் யாரையும் ஹாங்காங்கில், ஹாங்காங் ஆட்சியாளர் அனுமதி இன்றி நாடு கடத்த முடியும். அவர்களை சீனா உள்ளிட்ட எங்கும் நாடு கடத்த முடியும். இதை எதிர்த்துதான் அங்கு மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

தற்போதுதான் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மிக முக்கியமாக ஹாங்காங்கில் சென்ட்ரல் விமான நிலையத்தில் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. வார இறுதிநாட்களில் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது

சுமார் 6-7 லட்சம் பேர் தினமும் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஒரு முகம் என்றால் அது ஜோஸ்வா வாங் என்ற இளைஞர்தான். இவருக்கு 22 வயதுதான் ஆகிறது. ஹாங்காங்கை சேர்ந்த இவர் அதன் சுயாட்சிக்காக 2014ல் இருந்து போராடி வருகிறார்.

2014ல் நடந்த குடை புரட்சி போராட்டத்தை இவர்தான் முன்னின்றி நடத்தினார். அப்போதே இவர் உலகம் முழுக்க அறியப்பட்டார். அந்த போராட்டம் ஹாங்காங்கை மொத்தமாக மாற்றியது. சீனா அப்போதில் இருந்து இவர் மீது ஒரு கண் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 22 வயது இளைஞர் ஜோஸ்வா வாங் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். சீனா ராணுவம் பெரிய அளவில் குவிக்கப்பட்டு, ஹாங்காங் போலீஸ் படையின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் எங்கே விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. இவருடன் இன்னும் சில போராளி குழு தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளை ஹாங்காங்கில் பெரிய அளவில் போராட்டங்கள் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை தடுக்கும் பொருட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஹாங்காங் அமைதிக்கான மாநாட்டில் இந்த வாரம் வாங் கலந்து கொள்ள இருந்தார். அதற்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments