விசயகலாவின் தேசிய தலைவர் ரணில் தானாம்?


ஜக்கிய தேசியக்கட்சியின் பெரும்பான்மையினர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவை முன்மொழிய நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சரியான ஒருவரை தேசியத் தலைவராக கொண்டு வர வேண்டும். அதற்கு இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது மக்களுக்கு தேவையான பல அபிவிருத்திப் பணிகளை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமையவே பலாழ விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு தேவையான அபிவிருத்திப் பணிகள் ஒரு புறம் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த கால நிலைமைகளால் இங்கிருந்து இடம் பெயர்ந்து தொடர்ந்தும் அகதிகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றமை வேதனையாகவே உள்ளது.

குறிப்பாக இந்த மக்களுக்கு எதிராக இருந்த கடந்த ஆட்சியை மாற்ற வேண்டுமென மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். அதனூடாக ஐனாதிபதி தெரிவு செய்யப்பட்டு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்தக் காலத்தில் தான் மக்களுடைய பல பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களுடைய தேவைகள் எதிர்பார்ப்புக்களையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது.

ஆனால் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சியால் இவை தடைப்பட்டிருந்ததை மக்களும் நன்கு அறிவார்கள். ஆனாலும் அதனையெல்லாம் தாண்டி நாங்கள் மிPண்டும் எம்மாலான சேவைகளை இந்த மக்களுக்கு வழங்கி வருகின்றோம். அவ்வாறு அபிவிருத்தி செய்வது போன்று அரசியல் தீர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டும் இந்த மக்களுக்கு அவசியமானதாகும்.

எனவே இந்த நாட்டிற்கு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தேசியத் தலைவராக வர வேண்டும். அதற்கும் எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார். ஆகவே தேர்தல் வருகின்ற போது அந்த நேரத்தில் இதைக் குறித்து அறிவிப்பதே பொருத்தமானதாக இருக்கும். அந்த நேரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற அல்லது விரும்புகின்ற ஒருவரை நாங்கள் தேசியத் தலைவராக நாங்கள் கொண்டு வருவோமென விஜயகலா தெரிவித்துள்ளார்.

No comments