உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:அரசியல் நாடகமே?


அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், நிலந்த ஜயவர்தனவிடம், ​நேற்றைய தினம் 4 மணித்தியாலங்கள் இரகசிய சாட்சிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும், நாடாளுமன்ற விசேட  தெரிவுக்குழுவின் உறுப்பினர்களால், நிலந்த ஜயவர்தனவிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், நாடாளுமன்றத்துக்கு வெளியில் அமைந்துள்ள ஓரிடத்தில் வைத்தே   சாட்சியங்கள் பெறப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னர், பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு வருமாறு, தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர், லத்தீப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்​கொள்ளுமாறு, தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன், ஐ.எஸ் அமைப்புக்கு ​தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லையென, குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், இன்று சாட்சியம் வழங்கும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments