கூட்டமைப்பின் ஒப்பாரி சலித்துபோயுள்ளது:விக்கினேஸ்வரன்!


கூட்டமைப்பினரின் காலங்கடந்த நாடாளுமன்ற ஒப்பாரிகளை மக்கள் கண்டுகொள்ளப்போவதில்லையென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் இன்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையினில் சமாதானத்திற்கான யுத்தம் என்கின்ற பெயரில் உலக வல்லரசுகளின் ஆதரவோடு எம் மண்ணில் எமது மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்புயுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் நீதியானதும் நியாயமானதுமான கோரிக்கைகளுக்கான தீர்வுத்திட்டத்தினை முன் வைப்பதிலும் அதனை அமுல்படுத்துவதிலும் கரிசனை காட்டாது இலங்கையின் ஆளும் அதிகாரவர்க்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்ற செயற்பாடு அவர்களின் உள்ளக்கிடக்கையை தெட்டத்தெளிவாக வெளிக்கொண்டுவருகின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவில்லை.நிலவுரிமை மற்றும் மரபுரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை பற்றி எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை. கன்னியாவில் ஒரு இந்து மதப் பெரியார் மீது வேண்டுமென்றே ஒருசிங்கள பௌத்தர் சுடு தேநீரை அவர் முகத்தில் வீசியுள்ளார். “சமாதானமாகப் போங்கள்”என்கின்றார்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பொலிஸாரும். ஒரு புத்தபிக்கு மீது தமிழர் ஒருவர் சுடுநீர் வீசியிருந்தாரானால் அவரைச் “சமாதானமாகப் போ”என்பார்களா? குறைந்தது பகிரங்கமாக எமது சுவாமியின் காலில் விழுந்துமன்னிப்புக் கேட்டால்த்தான் சுவாமி அவர்கள் சமாதானத்தை நாடவேண்டும். இவ்வாறான சம்பவங்கள் ஏராளம். கண்ணீர் களமாக காட்சியளிக்கின்றது எமது நிலம்.


ஒருமாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு இன நீதிமறுக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நிபந்தனைகளேதுமற்ற ஆதரவினை ஆதாரமாகக் கொண்டு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை  தன்னை விடுவித்துக்கொண்டுள்ளதோடு திட்டமிட்டேவேண்டுமென்று தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழித்து தமிழர் மண்ணில்  பௌத்த விகாரைகளைஅமைப்பதிலும் சிங்களக்குடியேற்றங்களை நிறுவுவதிலும் முனைப்போடு எந்த விதபதட்டமும் இல்லாது செயற்பட்டுவருகின்றது.

எமது மக்கள் தமது விரல்களாலேயே தங்களது கண்களைக் குத்திக்கொண்டுள்ளதை இப்பொழுது நன்கு உணரத்தொடங்கியுள்ளார்கள்.எமது மக்களின் உளஉணர்வுகளைஉதாசீனம் செய்துதொடர்ந்தும் அரச இயந்திரங்களின் ஒத்தோடிகளாக இருக்கின்ற இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை நான் வேதனையுடன் இங்கு தெரிவிக்கவேண்டி இருப்பதையிட்டு கவலையடைகின்றேன்.எமக்கு இப்பொழுது பாராளுமன்றத்தில் இருக்கும் பலத்தை வைத்து பலதையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றிருக்கலாம். இவ்வாறான பலம் இனி எமக்குக் கிடைக்குமோ தெரியாது. அவ்வாறு தமது பலத்தைப் பாவியாது இருந்தமை எப்பேற்பட்ட குற்றம் என்பதை இப்பொழுது உணர்ந்துள்ளனர் கூட்டமைப்பினர். அதனால் தான் தாம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக இப்போது கூறத்தொடங்கியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர்கள் இவ்வாறு கூறி மக்களின் அனுதாபத்தைப் பெறலாம் என்று யோசிக்கின்றார்கள்போலும். ஆனால் இதுகாறும் இருந்த பலத்தை எமதுமக்களின் நன்மைக்காகப் பாவியாது விட்டமை எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள் என்றுநம்புகின்றேன். ஆகவே,தான் தமிழ்மக்களின் பேரம் பேசும் சக்தியாக கட்சிபேதங்கள் இன்றி ஒரு மாபெரும் மாற்று அணியினைக் கட்டியெழுப்பவேண்டிய காலத்தின் கட்டாயம் இன்று எழுந்திருக்கின்றதென அவர் மேலும் தெரிவித்தார். 

No comments