பிரேசிலின் அமேசான் காடுகளும் ஒன்றரை கால்பந்தாட்ட மைதானமும்: கோ.சுந்தர்ராஜன்

தென்னமெரிக்க  நாடான பிரேசிலின் பங்களிப்பு என்பது, உலகத்திற்கு மிக முக்கியமானது.   நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சுமார்  20 சதவிகிதத்தை உற்பத்தி செய்வது, பிரேசில் நாட்டிலுள்ள "அமேசான் காடுகள்". இதுமட்டுமல்ல, இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய உயிரினங்களில் (தாவரங்கள் மற்றும் விலங்குகள் சேர்த்து) சுமார் 10 சதவிகிதம் இந்த காடுகளில்தான் உள்ளன, அவ்வளவு பல்லுயிரியம் நிறைந்த செழிப்பான காடுகள். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வெளியிட்ட "கார்பனை" இந்த காடுகளில் உள்ள மரங்கள் உள்வாங்கி நிற்கின்றன, அதுவும்  இந்த காடுகளை ஒட்டிய நாடுகளிலிருந்து வெளிவரக்கூடிய கார்பனை கடந்த பல ஆண்டுகளாக அமேசான் காடுகள் உள்வாங்கி உலகத்தை புவிவெப்பமாதலிலிருந்து காப்பாற்றி வருகின்றன.

இந்த காடுகளில் சுமார் 10 லட்சம் பூர்வகுடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், அவர்களுக்கு அமேசான்தான் வாழ்வாதாரம். இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த அமேசான் காடுகள் "இவ்வுலகின் நுரையீரல்கள்" என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் நிலப்பரப்பை ஒப்பிடுகையில் அதில் பாதியளவு அமேசான் காடுகளின் அளவு இருக்கும்.

அமேசானில் காடழிப்பு கடந்த பல ஆண்டுகளாக நடந்துவருகிறது, 1995 ஆம் ஆண்டு அதன் உச்சத்திற்கு சென்று சுமார் 29,500 சது.கிமி அளவிற்கும் காடுகள் அழிக்கப்பட்டன. அது படிப்படியாக குறைந்து 2012 ஆம் ஆண்டு குறைவான காடுகளே அழிக்கப்பட்டதாக தரவுகள் சுட்டிக்காண்பிக்கின்றன. 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு காடழிப்பு மிக அதிகமாக துவங்கியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூன் மாதத்தில் 60% கூடுதலாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சென்றாண்டு ஜூன் மாதத்தில் 488.4 சது.கிலோமீட்டராக இருந்த காடழிப்பு இந்தாண்டு 769.1சது.கி மீட்டராக உயர்ந்துள்ளது. இது எவ்வளவு என்றால், சுமார் "ஒன்றை கால்பந்தாட்ட மைதானம்" அளவிற்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் காடுகள் அழிக்கப்படுகின்றன என்பது கணக்கு.

பிரேசில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அமேசான் காடுகளின் முழுவளமும் பயன்படுத்தப்படும் என்று கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி சிந்தனை கொண்ட "போல்சோனரோ" வெளிப்படையாக அறிவித்தார். தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பிறகு அவரும் அவருடைய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் சேர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்களை தளர்த்தியது மட்டுமல்லாமல் "ஒழுங்குமுறை அமைப்புகளையும்" நீர்த்துபோகச்செய்தனர். இந்த அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்கிற விவரத்தை சொல்வது பிரேசில் அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்தான், சென்ற மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களைக்கொண்டு வெளியிட்டுள்ளது.

போல்சோனரோவும் அவருடைய அரசாங்கமும் இவ்வுலகத்தின் "காலநிலை சமநிலைக்கு எதிரானவர்கள்" மட்டுமல்ல பிரேசிலின் "பொருளாதார சீரழிவுக்கு" இன்னும் சிலஆண்டுகளில் காரணமாகிவிடுவார்கள்  என்கிறது பிரேசில் நாட்டிலுள்ள கிரீன்பீஸ் அமைப்பு. பிரேசில் அதிபரின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கப்பட்டதுதான், ஏனென்றால் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் மைய பொருளே இதுதான். இவரைப்போல் சூழலுக்கும் பூர்வகுடிகளுக்கும் எதிரான ஒரு அதிபரை இதுவரை பிரேசில் சந்தித்தது கிடையாது என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த ரிட்டில்.

போல்சோனாரோவின் இம்மாதிரியான "வணிகசார்பு" நிலைப்பாட்டால் துணிச்சலான மரம்கடத்திகள், விவசாயிகள் மற்றும் சுரங்கத் முதலாளிகள், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, அமேசான் வனப்பகுதிக்குள் அழிக்கப்பட்டுவரும் நிலப்பரப்பின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான வேலைகளை செய்துவருகிறார்கள் என்கிறார் ரிட்டில்.  காடழிப்பை கட்டுக்குள் வைக்க நினைக்கும் அமைப்புகளை அரசு முடக்க ஆரம்பித்துள்ளது.

பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமலாக்க நிறுவனமான பிரேசிலிய சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய  நிறுவனத்தின் (ஐபாமா) பட்ஜெட்டை 23 மில்லியன் டாலர் குறைத்துள்ளது அரசு, மேலும் ஆறு மாதங்களில், அரசாங்கம் "ஐபாமாவின்" 27 மாநில அலுவலகங்களில் நான்கிற்கு மட்டுமே பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அந்த நான்கு மாநிலங்களுமே அமேசான் மழைக்காடுகள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய  அதிகாரம் கொண்டவை கிடையாது.

நடைபெறும் காடழிப்பிற்கு எதிரான சூழல் அமுலாக்க துறையான ஐபாமாவின் செயல்பாடுகள் மிகக்குறைவாக இருப்பதாக காலநிலை ஆய்வகம் தெரிவிக்கிறது. நடைபெறும் இப்பேரழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளையும் காரணமென சுட்டிக்காட்டுகிறார் ரிட்டில். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நடைபெறும் காடழிப்பிற்கு எதிராக அறிக்கைகளுடன் நிறுத்திக்கொண்டார்கள், கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் பிரேசில் நாட்டை உள்ளடக்கிய "தென் அமெரிக்க வர்த்தக முகாமான "மெர்கோசூருடன்" வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமேசான் காடுகளின் மீதும் அதன் சூழல் அமைப்பின் மீதும் அதிக அழிவுகளை ஏற்படுத்தும் என்கிறார் ரிட்டில்.

காலநிலை மாற்றம் மானுடத்தின் இருத்தியலை கேள்விக்கு உட்படுத்தியிருக்கும் இந்த தருணத்தில், காடுகளை அதிகப்படுத்தினால்தான் ஓரளவிற்காவது புவிவெப்பமயமாதலை தடுக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் உலகின் "கார்பன் தொட்டி" என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது துளிஅளவிற்கு கூட ஏற்றுக்கொள்ளமுடியாதது. வலதுசாரி சிந்தனை கொண்ட அரசுகள் எங்கே ஆட்சிக்கு வந்தாலும் அங்கே அழிவுதான் என்பதற்கு சரியான உதாரணமாக இருப்பது போல்சோனரோவின் பிரேசில் அரசாங்கம், அதுவும் போல்சோனரோவின் செல்லப்பெயர் "வெப்பமண்டலத்தின் டிரம்ப்", எவ்வளவு பொருத்தம் !

No comments