தஞ்சை பெரிய கோயிலை பாதிக்கும் 500 அடி குழாய் - தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்!

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழரின் கலைச் சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமானத்தை பாதிக்கும் வகையில், கோயிலுக்கு மிக அருகில் தஞ்சை மாநகராட்சியினர் 500 அடி ஆழ்குழாய்க் கிணறு அமைக்க முயன்ற நிலையில், தமிழின உணர்வாளர்களின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகில் 500 அடியில் ஆழ்குழாய்க் கிணறு போடப்படுவதாக வந்தத் தகவலைத் தொடர்ந்து, இன்று (11.07.2019) காலை தஞ்சை மாநகர ஆணையர் திருமதி. ஜானகி ரவீந்திரன் அவர்களை அவரது அலுவலகத்தில் “தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு”வினர் நேரில் சந்தித்து மனு அளித்து, பெரிய கோயில் கட்டுமானத்தை பாதிக்கும்படியான ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் முயற்சியைக் கைவிடக் கோரினர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :

“தஞ்சைப் பெருவுடையார் கோயில் மதில்சுவர் ஓரமாக, மாமன்னன் இராசராசசோழன் சிலையை யொட்டி தஞ்சை மாநகராட்சி ஆழ்குழாய்க் கிணறு தோண்டுகிறது. 500 அடி ஆழம் தோண்டப் போவதாக அப்பணியில் உள்ளோர் கூறுகிறார்கள். இச்செயல் அருகிலுள்ள தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டடங்களுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

கனரக எந்திரங்களை வைத்து இவ்வளவு ஆழம் தோண்டும்போதும், அதன்பிறகு தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சும்போதும் அருகிலுள்ள பெரிய கோயில் மதில் சுவர், கேரளாந்தகன் வாயில், அதையடுத்து பெரிய கோயில் கட்டுமானம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயமிருக்கிறது.

பெரிய கோயில் வளாகத்திற்குள் கடந்த 2010ஆம் ஆண்டில், ஆழ்குழாய்க் கிணறு தோண்டிய போது எங்களது “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு” சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம் என்பதையும், அதில், 26.08.2010 அன்று     உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தது என்பதையும் தங்கள் கவனத்திற்குக்  கொண்டு வருகிறோம்.

தமிழ்ப்பேரரசன் இராசராசசோழனால் கி.பி. 1010ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரத்தோடு நிற்கும் பெருங்கோயிலாகும். உலகே வியக்கும் மாபெரும் கட்டமைப்பும், மிக நுணுக்கமான கல் தச்சுப் பணிகளும் கொண்ட பல துறைத் தொழில்நுட்பங்களும் கொண்ட ஆன்மிகக் கட்டமைப்பாகும்.

இதன் சிறப்பு கருதிதான் ஐ.நா.வின் யுனெஸ்கோ உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரிய கோயிலை அறிவித்திருக்கிறது. இந்திய அரசின் “பழங்கால சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் அவற்றின் எச்சங்கள் பாதுகாப்புச் சட்டம் - 1958”இன்படியும், “சென்னை தொல்லியல் கட்டுமானங்கள் சட்டம் - 1966”- இன்படியும் “பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்ன”மாக தஞ்சைப் பெரிய கோயில் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

தஞ்சைப் பெரிய கோயில் தனித்தன்மையான கட்டடப் பொறியியலை பின்பற்றிக் கட்டப் பட்டதாகும். அடித்தளத்தில் மணல், அதன் மேல் களிமண், அதற்கு மேல் வெவ்வேறு அளவுகளிலான கற்கள், அதன் மீது பாறைக் கட்டுமானங்கள் என்ற வகையில் அதன் கட்டுமானங்கள் உள்ளன.

இப்படிப்பட்ட அரிய ஆன்மிக கலைப் பெட்டகமாக விளங்கும் பெரிய கோயில் அருகே 500 அடி ஆழம் தோண்டி தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சும்போது, அது உருவாக்கும் வெற்றிடத்தில் இந்தக் கட்டுமான மணல் உள் இழுக்கப்பட்டு சரிவதற்கான வாய்ப்புண்டு! அதன் தொடர்ச்சியாக, கேரளாந்தகன் வாயில் தொடங்கி மதில் சுவர் மற்றும் உள்ளே உள்ள பழைய புகழ்வாய்ந்த கட்டுமானங்களின் அடித்தளம் வலுவிழந்து விரிசலும், பாதிப்பும் ஏற்படக்கூடும்!

திருச்சி திருவரங்கம் (சிறீரங்கம்) கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதற்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் விரிசல் விழுந்ததற்கும் சுற்றிலும் நடந்த கட்டுமானப் பணிகளும், நிலத்தடி நீர் உறிஞ்சும் பணிகளும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்ததை வல்லுநர்கள்    ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஆந்திரப்பிரதேசத்தில் திருக்காளத்திக் கோயில் (காளகஸ்த்தி) கோபுரம் திடீரென்று தரைமட்டமானதை பார்த்திருக்கிறோம்.

பெரிய கோயிலின் கேரளாந்தகன் வாயிலில் ஏற்கெனவே சிறு சிறு பாதிப்புகள் மழைக் காலங்களில் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

இச்சூழலில், இராசராசன் சிலைக்கு அருகில் 500 அடி ஆழம் தோண்டி தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சப்படும்போது, பழமை வாய்ந்த இப்பெருங்கோயிலின் கட்டுமானங்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வரும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், இராசராசசோழன் பூங்கா தேவைக்கும் உரிய தண்ணீரை வெளியிலிருந்துதான் கொண்டு வர வேண்டுமே தவிர, இவ்வாறு கோயிலுக்கு அருகிலேயே ஆழ்குழாய்க் கிணறு தோண்டி தண்ணீர் உறிஞ்சுவது மிகவும் ஆபத்தானது.

எனவே, தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் தஞ்சைப் பெரிய கோயில் இராசராசசோழன் சிலைக்கு அருகில் 500 அடியில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணியைக் கைவிடுமாறு “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு” சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான திரு. பெ. மணியரசன், உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், பொருளாளர் திரு. பழ. இராசேந்திரன் அம்மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.

தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், பொருளாளர் திரு. பழ. இராசேந்திரன், தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன், திருவாளர்கள் வல்லம் பி. முருகையன், மதிவாணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட தோழர்கள் அம்மனுவை மாநகராட்சி ஆணையரிடம் கையளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையர், அதன் மீது உடனே நடவடிக்கை எடுப்பதாகவும், ஏற்கெனவே தொல்லியல் துறையிலிருந்து இதேபோன்று கோரிக்கை வந்துள்ளதாகவும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நிறுத்தப்படும் என்றும் பதில் அளித்தார்.
       
 


No comments