தமிழ் இளைஞர்கள் கடத்தல் முன்பே தெரியும் - அட்மிரல் வசந்த கரன்னகொட

தெகிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை, அறிந்திருந்தார் என்பதை, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொழும்பு பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் குறித்து விசாரித்து வரும், குற்ற விசாரணைப் பிரிவு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அளித்துள்ள ‘பி’ அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

தமது விசாரணைகளின் போதே, தெகிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை, அறிந்திருந்தார் என்பதை, அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கடத்தப்பட்ட இளைஞர்களைப் பற்றி முதன்முதலில் 2009 மே 10ஆம் நாள் அறிவிக்கப்பட்ட போதும், கிழக்கு கடற்படைத் தலைமையகத்தில் இருந்த இளைஞர்களை விடுவிப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு, அட்மிரல் கரன்னகொட தவறிவிட்டார் என்றும் குற்ற விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

அவர் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் குறித்து, சரியாக கவனத்தில் எடுத்து, செயற்பட்டிருந்தால், அந்த இளைஞர்கள் மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்ட ஏனையவர்களையும் பாதுகாத்திருக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞர்கள் தொடர்பாக கடற்படைப் புலனாய்வு பணிப்பாளர் றியர் அட்மிரல் ஏ.கே.குருகே வழங்கிய முக்கியமான ஆதாரம் தொடர்பாக, 2009 மே 28ஆம் நாள், குற்றப் பிரிவு பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் அளித்த முறைப்பாட்டில், குறிப்பிடத் தவறியது குறித்தும், அட்மிரல் கரன்னகொட மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை மறைத்து, குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைப் பாதுகாக்க அவர் முனைந்துள்ளார் என்று, இப்போது தெரியவந்துள்ளது” என குற்ற விசாரணைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments