மரண தண்டைனை வேண்டாம்: நீதி சமாதான ஆணைக்குழு


மரணதண்டனையை விடுத்து போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாவனையையும் நிறுத்த ஒரு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் எஸ்.வி.பி.மங்களராஜா அடிகளார்.

தூக்குத்தண்டனை நிறைவேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில்  யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் எஸ்.வி.பி.மங்களராஜா அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் போதைப் பொருளை முற்றாகத் தடைசெய்து போதைப் பொருள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க ஒரே வழி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருப்போர் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது என்ற எமது ஜனாதிபதியின் திட்டத்தை நாம் முற்றாக எதிர்க்கிறோம். இம்மரணதண்டனையை எதிர்ப்போர் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும், நுகர்வுக்கும் ஆதரவானவர்கள் என்ற ஜனாதிபதியின் கூற்றையும் நாம் கண்டிக்கின்றோம். 

உலகில் அனேகமான நாடுகளில் மரணதண்டனை இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. இலங்கையிலும் 1976ம் ஆண்டுக்குப்பின் மரணதண்டனையெதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்தப் பின்னணியில் சில மாதங்களுக்குமுன் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் எந்த ஒரு மனிதனுக்கும் சக மனிதனுக்கு மரணதண்டனை நிறைவேற்ற எச்சர்ந்தப்பத்திலும் உரிமை கிடையாது என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இலங்கையில் இப்பிரச்சனையின் காத்திரத்தன்மை காரணமாக இலங்கைக்கான பாப்பரசரின் தூதுவர் பேரருட்திரு. நிகுவென் வான் டொட் ஆண்டகை பாப்பரசரின் கருத்தினைக் கோடிட்டுக் காட்டி ஒரு விசேட அறிக்கையை விட்டிருந்தார். அதற்கு மேலாக அதே கூற்றுக்கிணங்க இலங்கைக் கத்தோலிக்க திருஅவையின் அதியுயர்ந்த தீர்மானம் எடுக்கும் அமைப்பாகிய இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையும் மரண தண்டனை நிறைவேற்றத்தை முற்றாக எதிர்த்து அறிக்கை விட்டிருந்தது. இவ்வறிக்கை கத்தோலிக்க திருஅவையில் ஏற்பட்ட சில குழப்பநிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 


இன்னும் சில நாட்களில் போதைவஸ்து தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களுள் ஒரு தொகுதியினருக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான ஆணையில் எமது ஜனாதிபதி பல நாடுகளதும், மனித உரிமை அமைப்புக்களதும், சமயத் தலைவர்களதும் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலும் கையெழுத்திட்டமை எமக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றுவதை விடுத்து போதைப்பொருள் வர்த்தகத்தையும், பாவனையையும் வினைத்திறனுடன் நிறுத்துவதற்கு மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை அதிபர்கள், பாதுகாப்புத்துறையினர் ஆகியோரின் உதவியுடன் பரந்த அளவில் ஒரு வேலைதிட்டத்தை ஏற்படுத்துவதில் முழுக்கவனத்தைச் செலுத்துமாறு நாட்டின் பெயரைக் காப்பதில் முக்கிய பங்கு வகுக்க வேண்டிய ஜனாதிபதி ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.

No comments