திருமலை மாணவர் படுகொலை - படுகொலையாளிகளான 13 படையினர் விடுவிப்பு


க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட   சம்பவத்துடன் தொடர்புடைய  13 அரச படையினரை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு வருகைதந்த  இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  கொல்லப்பட்டனர்.

மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களுமே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத்தால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரியுள்ளனர்.

இந்தக் படுகொலையை அரசும், இராணுவத்தினரும், பொலிஸாரும் மறுத்து வந்ததுடன், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனவும், இவர்கள் இராணுவத்தினரைத் தாக்கமுற்றபட்ட சமயம் கைக்குண்டு வெடித்தே உயிரிழந்தனர் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், மாணவர்கள் அனைவரும் கிட்ட நின்று துப்பாக்கியால் சுடப்பட்டமை சட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிக் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மற்றும் 12 சிறப்பு அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்  2013ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட அனைவரும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

13 அரச படையினருக்கும் எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. 36 பேர் சாட்சிகளாக பெயரிடப்பட்டனர். அவர்களில் முக்கிய சாட்சிகள் 8 பேர் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவில்லை. அவர்களில் இருவர் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களாவர்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எம்.மொகமெட் ஹம்சா முன்னிலையில் இந்த வழக்கு இன்று கட்டளைக்காக வந்தது.

“வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்று திருப்தியடையும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 153 மற்றும் 154ஆம் பிரிவுகளின் கீழ் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றாதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை. அதனால் 13 எதிரிகளும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்” என்று நீதிவான் எம்.எம்.மொகமெட் ஹம்சா கட்டளை வழங்கினார்.

இதேவேளை, 13 அரச படையினருக்கும் எதிராக சட்ட மா அதிபர் தனக்குள்ள அதிகாரத்தின் படி மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை செய்ய சட்ட ஏற்பாடுகள் உண்டு. எனினும் அது நடைபெறுமா என்பது கேள்விக் குறிதான்.

No comments