தெல்லிப்பழை:இலங்கையின் அபாயகரமான குப்பைத்தொட்டி?


இலங்கையின் அபாயம் மிக்க மருந்துப்பொருட்களை அழிக்கின்ற மையமொன்றை இலங்கை சுகாதார அமைச்சு தெல்லிப்பழையில் நிறுவியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக புற்றுநோயிற்கு பயன்படுத்தும் மிக மிக அபாயகரமான மருந்துப்பொருட்கள் தெற்கில் அதிலும் அனுராதபுரத்திலிருந்து பெருமளவில் எடுத்துவரப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையினை அண்டிய சூழலில் எரித்து அழிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.கதிர்வீச்சு அபாயம் ஒருபுறமும் காலாவதியானால் அதன் வீரியத்தன்மை இன்னமும் மோசமடைகின்றதொரு சூழலில்; அதனை திட்டமிட்டே வடக்கிற்கு கொண்டுவருவதான சந்தேகம் உள்ளது.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலரும் அறிந்துள்ள போதும் தெற்கின் கழிவுகளை கொட்ட எதனடிப்படையில் அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக புற்றுநோய்களிற்கான மருந்துக்கள் வீரியம் மிக்கவை.

அவற்றின் பாவனை திகதி காலாவதியானால் தொழிற்சாலைகள் மீள அவற்றினை தம்மிடம் ஒப்படைக்க கோருகின்றன.  

அத்தகைய அபாயகரமான காலாவதியான மருந்து பொருட்களை அதுவும் மக்கள் செறிந்து வாழும் தெல்லிப்பழையில் அழிப்பது பொருத்தமானதாவென தனது பெயரை வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதிலும் அனுராதபுரம் போன்ற பிரதேச கழிவுகளை கூட தெல்லிப்பழையில் அகற்ற அதுவொரு கழிவு கொட்டும் இடமாவென உள்ளுர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.அதிலும் வலி.வடக்கு பிரதேசசபை போன்றவை இத்தகைய மருத்துவ கழிவுகளை அகற்ற எவ்வாறு அனுமதி அளிக்கின்றன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

No comments