நீங்கள் ஏற்கனவே கூறியதைத்தான் இன்றும் கூறியுள்ளீர்கள் - நரேந்திரமோடி

சிறீலங்காப் பயணத்தை இன்று மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்தார்.

நரேந்திரமோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக வந்தமைக்கு வாழ்த்தைத் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

சந்திப்பானது அண்ணளவாக 7 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே சிறீலங்கா அரசியல் அமைப்பு இருப்பதாகவும் இலங்கையில் தமிழர்கள் சமமாக வாழ இந்தியா கரிசனை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன் பலாலி வானூர்தி நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் சிறிய ரக வானூர்திகளைச் சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

கூட்டமைப்பின் கோரிக்கையை செவிமடுத்த நரேந்திரமோடி இது பற்றி ஏற்கனவே என்னிடம் இவ்விடயங்கள் குறித்து கூறியுள்ளீர்கள் என்பதை நினைவுபடுத்தினார்.

எதுவாக இருந்தாலும் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள் இவை பற்றி விரிவாக பேசலாம் என்று மோடி கூட்டமைப்பினரிடம் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் இந்தியப் பயண ஏற்பாட்டையும், கூட்டமைப்பினர் கூறிய விடயங்களைக் கவனத்தில் எடுக்குமாறு அங்கிருந்த தூதரக அதிகாரிகளிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments