‘முகிலன் எங்கே?’ என்று கேட்பது ஏன் முக்கியமானது?


சமூகச் செயற்பாட்டாளர் முகிலன் நம் சமூகத்தின் கண்களுக்கு அப்பால் சென்று நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் வந்துவிடுவார் என்றார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் வந்துவிடுவார் என்றார்கள். இன்னமும் வரவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதுகூடத் தெரியவில்லை.
முகிலன் காணாமல் போனதற்கு, அவர் யாரையெல்லாம் எதிர்த்துப் போராடினாரோ, அவர்களே காரணம் என்கிறார்கள், முகிலனோடு சமூகப் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். அதைத் தாண்டி வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டன. அவரது குடும்பச் சிக்கல் காரணமாகவும் அவர் தன்மறைப்பு செய்துகொண்டிருக்கலாம் என்று ஒரு சிலரால் சொல்லப்பட்டது.
முகிலன் குறித்து விசாரணை நடத்தும் காவல்துறை, முகிலனின் சக சமூகச் செயற்பாட்டாளர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது. முகிலன் யாரை எதிர்த்துப் போராடினாரோ, அவர்களிடம் ஒருமுறைகூட விசாரணை நடத்தியதாகத் தெரியவில்லை.
முகிலன் காணாமல் போனதற்குக் காரணம் எதுவாயிருந்தாலும், முகிலன் என்கிற சமூகச் செயற்பாட்டாளர் என்ன ஆனார் என்று கேட்பது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
’முகிலன் எங்கே?’ என்று கேட்க இங்கே பெரும்பாலானோருக்கு நேரம் இல்லை – முகிலனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் அரசாங்கத்திடம், காவல்துறையிடம், நீதிமன்றத்திடம், ஊடகங்களிடம் முனைப்பு இல்லை – பொதுமக்களாகிய நாமும் கண்டுகொள்ளாமல் கடந்து போகிறோம் – என்றால்,
நாம் ஜனநாயகத்தன்மையை இழந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.
நாம் ஒருவிதமான சர்வாதிகாரப் போக்கிற்கு மனதளவில் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
இனி யார் குறித்தும் கேள்விகள் கேட்க முடியாது என்கிற நிலையை வரவேற்கத் தொடங்கிவிட்டோம் என்று பொருள்.
அப்படியெல்லாம் இல்லை என்று நாம் நினைத்தால், ‘முகிலன் எங்கே?’ என்கிற கேள்வி இயல்பாக நம்முடைய மனதிலிருந்து எழ வேண்டும். ’முகிலன் எங்கே?’ என்கிற குரல், சமூகத் தளத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
அவர் நமக்காகத்தான் பணியாற்றினார். நமக்காகத்தான் சிறைக்குச் சென்றார். காவிரியாற்றை, நொய்யலாற்றை, தாமிரபரணியை, கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராட்டங்களில் பங்கெடுத்தார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குச் சிறையில் இருந்து, கொசுக்கடிக்கும், பூச்சிக்கடிக்கும் ஆளாகி, உடல்நலிவு கொண்டார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அடிப்படையில் அவர் இந்தச் சமூகத்தின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவே தன்னைப் பொதுவாழ்வில் ஒப்படைத்துக் கொண்டார்.
நாளைக்கு நமக்கும் இப்படி நடக்கலாம் என்பதற்காக அல்ல –
நாளை நமக்கு இப்படியெல்லாம் நடக்காது என்று தெரிந்தாலும் –
’முகிலன் எங்கே?’ என்கிற கேள்வியை நாம் கேட்க வேண்டும்.
அதுதான், ஒரு சமூகச் செயற்பாட்டாளருக்கு நாம் செலுத்தும் அன்புக்கடன்.

  -தமிழகத்திலிருந்து  ப.கலாநிதி -

No comments