வியாழேந்திரனின் நாடகமும் அரங்கேற தொடங்கியது?


குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரிகளுடன் உறவை பேணிய ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்க வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகை முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.இந்நிலையில் ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்களுடன் சம்பந்தப்படுத்தி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் அமைச்சர்களையும் ஆளுநர்களையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளார்.

தனது ஆதரவாளர்கள் சகிதம் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதனிடையே இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு அத்துரலிய ரத்ன தேரர் பெரிதாக செய்த உதவியொன்று இல்லையென பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அத்துரலிய ரத்ன தேரர் ஒரு காலத்தில் ஒரு பக்கத்தில் இருப்பார். இன்னுமொரு காலத்தில் அடுத்த பக்கத்துக்கு பாய்வார். தேரர் பாயும் வேலையை மட்டும்தான் செய்கின்றார். தேரர் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாத போது இவ்வாறு செய்கின்றார். மத வழிபாடுகளில் ஈடுபடாமல் இருந்துவிட்டு, தேரர் சொல்லும் விடயங்களை ஏற்க நாம் தயாரில்லை.

அரசாங்கத்துக்கு அதிகாரத்துக்கு வருவதற்கு இதுபோன்றவர்களின் உதவிகள் தேவையில்லை. நாட்டு மக்களே தமது உரிமையை பிரயோகித்துள்ளனர். மக்களின் ஆதரவு இன்னும் எங்களுக்கு இருக்கின்றது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments