மூடிய அறையினுள் நாலக்க டீ சில்வா சாட்சியம்?


உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் பற்றிய தகவல்கள் உள்ளதாகவும் அவை பற்றி, மூடிய அறையில், இரகசியமான முறையிலேயே வழங்க முடியுமென்றும் கூறிய பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா, ஊடகவியலாளர்கள் அற்ற அறையில்,அவர்கள் பற்றி,  நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ​கூறினார்.
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால், நேற்றைய தினம் (04) சாட்சியமளித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரமரட்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆஷு மாரசிங்க, ரவி கருணாநாயக்க, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு முன்னியிலேயே அவர் சாட்சியமளித்தார்.
இதன்போது, இலங்கையில் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம், தமிழகத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.
21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த மேலும் பல விடயங்களை இதன்போது அவர் தனிப்பட்ட ரீதியிலேயே, தெரிவுக்குழு முன்னிலையில் கூறினார். இதன்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதன்போது, 21ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரானை, இன்டர்போல் உதவியுடன் தேடியதாகவும் இது குறித்து, 2017ஆம் ஆண்டு இறுதி முதல், அப்போதிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாவனையிலிருந்த சஹ்ரானின் இரண்டு கணக்குள் தொடர்பாக கண்காணிக்குமாறு, பேஸ்புக் நிறுவனத்திடம் கோரியிருந்த போதிலும், அதற்கு, பேஸ்புக் நிறுவனம் பின்னூட்டல் வழங்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

No comments