அழுத்தம் கொடுக்கப் போகிறோம் - பிரிட்டன்

மனித உரிமை விவகாரங்களில் இலங்கை இவ்வருடம் முன்னேற்றத்தை காண்பதற்கான அழுத்தங்களை கொடுக்கப்போவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

2018 இல் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தப்போவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

2018 இல் இலங்கையில்  மனித உரிமை நிலவரத்தில் முன்னேற்றங்களும் காணப்பட்டன பின்னடைவுகளும் காணப்பட்டன என  பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இனங்களிற்கு இடையிலான பதட்டம்,நல்லிணக்கத்துடன் தொடர்புபட்ட முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் மந்தநிலை,புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் தாமதம் மற்றும் நிலைமாற்று நீதிக்கான செயற்பாடுகள் முடங்கியுள்ளமை ஆகியனவே கரிசனைக்குரிய விடயங்கள் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இலங்கையில்51 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடி இவற்றை நடைமுறைப்படுத்துவதை தடுத்துள்ளது எனவும் பிரிட்டன் தனது மனித உரிமை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் உருவாகிய அரசமைப்பு நெருக்கடி இலங்கையில் சுயாதீன ஸ்தாபனங்களின் முக்கியத்துவத்தை புலப்படுத்தியுள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் ஊடகவியலாளர்களும் சிவில் சமூகத்தினரும் அச்சுறுத்தப்படுவது அதிகரித்தது எனவும் குறிப்பிட்டுள்ள பிரிட்டன்,கடந்த வருடம் முழுவதும் இலங்கையின் வடபகுதியை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது துன்புறுத்தப்படுவது குறித்த கரிசனைகளை அதிகமாக வெளியிட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

No comments