மயிரிழையில் தப்பித்தாரா சுமந்திரன்?


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சுமந்திரன், கோடீஸ்வரன் ஆகிய பிரமுகர்களிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு ஏற்பட்ட முரண்பாடு தள்ளுமுள்ளுவரை சென்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திப்பதற்கு இன்று மாலை மேற்படி பிரமுகர்கள் சென்றனர். கல்முனையை மூன்று மாதத்தில் தரமுயர்த்தும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிப்பை பிரமுகர்கள் வெளியிட்டனர். மூன்று மாத கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பொதுமக்களும், போராட்டக்காரர்களும் கருத்து தெரிவித்தனர்.

மூன்று மாத அவகாசமென்பது தம்மை ஏமாற்றும் நடவடிக்கையென பொதுமக்கள் கொந்தளித்தனர்.இதேவேளை இதற்கு முன்னதாக, அமைச்சர் தயா கமகே இந்த பிரதேசத்திற்கு வந்து, தமிழர்களிற்கு எதிராக போராட்டம் நடத்தும் முஸ்லிம்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இது கல்முனை தமிழ்மக்களை கொதிப்படைய வைத்திருந்தது.

நியாயமான கோரிக்கையுடன் போராட்டம் நடத்தும் தம்மை வந்து சந்திக்காமல் எதற்கு, நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துபவர்களை சந்திக்கிறீர்கள் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பிரமுகர்கள் வெளியேறி முற்பட்டபோது, பொதுமக்கள் பிரமுகர்களை சுற்றிவளைத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடைந்து தள்ளுமுள்ளுவரை சென்றது. பிரமுகர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்ததால், அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலைமையேற்ப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரன் மீது அங்கிருந்தவர்கள் தாக்க முற்பட்டனர். அவரது உதவியாளர்கள் அவரை சூழ்ந்து பாதுகாப்பளித்தனர். சுமந்திரன் மீதான தாக்குதல்கள் அவரது உதவியாளர்கள் தாங்கிக்கொண்டனர்.

பிரமுகர்கள் மீது கையில் கிடைத்தவற்றை குழுவினர் எறிந்தனர். செருப்புக்களும் வீசப்பட்டன.

அந்த பகுதியே பெரும் அல்லோலகல்லோப்பட்டது. இறுதியில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு, பிரமுகர்களை பாதுகாப்பாக மக்களிடமிருந்து மீட்டெடுத்தனர்.

பிரமுகர்கள் வெளியேறும்போதும் மீண்டும் பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டு, எல்லைமீறி நடக்க முற்பட்டனர். எனினும், பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவினர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்

No comments