பாராளுமன்ற தெரிவுக்குழு முன் மைத்திரியை கடாசித் தள்ளினார் பூஜித்த

” தற்கொலை தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்தால் தூதுவர் பதவி வழங்கப்படுமென ஜனாதிபதி சொன்னார் . அதேபோல விசாரணையில் க்ளியர் ஆகி பெயரை காப்பாற்றிக் கொள்ளலாம் எனவும் ஜனாதிபதி சொன்னார் – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் முன்கூட்டியே தெரியாது.ஆனால் நான் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளேன் ”

இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் தெரிவித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர.அவர் மேலும் கூறியதாவது,

பொலிஸ் மா அதிபர் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதியிடம் பரிமாறும் ஒரு ஏற்பாடு இருக்கவில்லை.தேசிய புலனாய்வுத்துறை பணிப்பாளர் நேரடியாக அந்த தகவல்களை ஜனாதிபதியிடம் வழங்கிவந்தார்.முன்னாள் பாதுகாப்பு செயலாளர் புலனாய்வுத் தகவல்கள் எதனையும் ஜனாதிபதியிடம் கூறினால் அதை புலனாய்வுத்துறை பணிப்பாளர் நிலந்த ஏற்கனவே தம்மிடம் கூறிவிட்டாரென ஜனாதிபதி சொல்லுவாரென பாதுகாப்பு செயலாளர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

சஹ்ரானின் சகாக்களால் செய்யப்பட்டதாக சொல்லப்படும் காத்தான்குடி மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு தொடர்பாக ஏப்ரல் 18 ஆம் திகதி எனக்கு புலனாய்வுத்துறை கடிதம் மூலம் அறிவித்தது.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து எனக்கு குறிப்பாக எந்த தகவலும் சொல்லப்படவில்லை.பொதுவான அச்சுறுத்தல் இருப்பதாகவே சொல்லப்பட்டது.உடனடி தாக்குதல் குறித்து என்னிடம் எதுவும் சொல்லப்படவில்லை.ஆனால் தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன் என நன் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளேன்.ஏப்ரல் 2018 ற்கு பின்னர் ஸஹ்ரான் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.2018 ஜூனில் நீதிமன்ற பிடியாணை பெறப்பட்டது .இன்ரபோல் பொலிஸ் உதவி பெறப்பட்டது.

ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6.30 – 8 மணிக்குள் எனக்கு தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்தவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.” நாளை மிகவும் ஆபத்தானது.எதுவும் நடக்கலாம் ” என்று என்னிடம் சொல்லப்பட்டது.அதேபோல் ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 6.45 – 7.15 மணிக்குள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.ஆனால் இப்படியான தகவல்களை ஜனாதிபதிக்கு சொல்லும் நடைமுறை இருக்காதபடியால் என்னால் அப்படி கூற முடியாமற் போனது. சனிக்கிழமை இரவு எனக்கு தகவல் கிடைத்த பின்னர் உடனடியாக எல்லா பிரதி பொலிஸ் மா அதிபர்மார்களுக்கும் அறிவித்தேன்.அவசரகாலம் பிறப்பிக்கப்படவில்லை.ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க எனக்குஅதிகாரமில்லை.அவசரகால சட்டத்தை பிறப்பிக்க என்னால் தனியாக முடியாது.

நான் பதவியை ராஜினாமா செய்தால் எனக்கு தூதுவர் பதவி வழங்கப்படுமென கூறப்பட்டது.ஆனால் நான் அதனை ஏற்கவில்லை.இப்படியான உயர் பதவிகள் எனக்கு தேவையில்லை.எனது சேவைக்காலத்தில் நான் ஒழுங்கீனங்கள் இன்றி சேவையாற்றியவன்.

– என்றார் பூஜித்த

No comments