இலங்கை பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில்!

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இன்று காலை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ஏப்ரல் 25 ஆம் திகதி இராஜினாமா செய்தார்.  இருப்பினும், பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய முன்வராமையினால், ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அவர் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவே பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை ரத்து செய்து தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்திடம் அவர் கோரியுள்ளார்.

No comments